Tamilnadu

”சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” : LIC இந்தி திணிப்பு - துணை முதலமைச்சர் உதயநிதி ஆவேசம்!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் எல்.ஐ.சி-யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்திமயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது ஒன்றிய அரசின் இந்தித்திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என தெரிவித்துள்ளார்.

Also Read: 'திராவிட மாடல்’ ஆட்சிக்கு நிதி ஆயோக் பாராட்டு : மாநில உரிமைகளுக்கான உரிமைக் குரல் ! - கி.வீரமணி !