Tamilnadu

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி... விவரம் என்ன ?

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் சிங்கப்பூர், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு செல்லும் 4 புறப்பாடு விமானங்கள் மற்றும் இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரும் 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து இன்று பகல் 12.40 மணிக்கு, சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பகல் 12.55 மணிக்கு, டாக்காவில் இருந்து வரும் பி எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.55 மணிக்கு, இலங்கையிலிருந்து வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, இலங்கையிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 2.50 மணிக்கு, சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 11.25 மணிக்கு, இலங்கை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், பகல் 1.55 மணிக்கு, டாக்கா செல்ல வேண்டிய பி எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நிர்வாக காரணங்கள் காரணமாக, இந்த சர்வதேச விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் முறையான முன்னறிவிப்பு இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை !