Tamilnadu

மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்

கோயம்புத்தூரில் கடந்த அக்.27-ம் தேதி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தோர் ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், அவரது மகன் ஓம்கார் பாலாஜி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பங்குபெற்றனர்.

அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஈஷாவுக்கு எதிராகச் செய்தி வெளியிடும் நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்து அவதூறாக பேசினார். அவரது பேச்சு பொதுவெளியில் என்பதை கூட மறந்து, நக்கீரன் கோபாலின் நாக்கு அறுக்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், கண்டனங்கள் குவித்தது. அதோடு இந்த விவகாரம் குறித்து அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது திமுக பிரமுகர் ஒருவர்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஓம்கார் பாலாஜி மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவரை கைது செய்யக்கூடாது என்பதால் முன்ஜாமீன் கேட்டு, ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விசாரித்த நீதிமன்றம், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்கு ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கேட்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய தடையில்லை என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்ற வளாக நுழைவாயிலில் வைத்து ஓம்கார் பாலாஜியை கைது செய்து, கோவை அழைத்து சென்றது காவல்துறை. இந்த சூழலில் தனது மகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அர்ஜுன் சம்பத் தலைமையில் இன்று (நவ.17) கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் வந்திருந்த 6-7 பேபெரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், வேலைவாய்ப்பு குறித்த கூட்டம் என்று கூறி பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏமாற்றி இந்து மக்கள் கட்சி, போராட்டத்துக்கு வரவழைத்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அதாவது போராட்டத்தின் போது, அங்கு நின்று கொண்டிருந்த மாணவர்கள் செய்வதறியாது திணறி கொண்டிருந்தனர்.

இதனை கண்ட போலீஸார், அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது அந்த மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு குறித்த மீட்டிங் என்று இந்து மக்கள் கட்சியினரால் வரவழைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் ஒரு வேனில் ஏற்றிச் சென்று, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் இருக்க வைத்தனர்.

அதோடு மாணவர்களை அழைத்து வந்த வேன் ஓட்டுநரையும் போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றியபோது, தனக்கு இது என்ன போராட்டம் என்றே தெரியாது என்று விழிபிதுங்கியவாறு போலீசாரிடம் கெஞ்சினார். ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் இல்லாததால் ஏமாற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வந்த அர்ஜுன் சம்பத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Also Read: Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !