Tamilnadu
“காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பதோ முத்தம் கொடுப்பதோ குற்றமில்லை..” - உயர்நீதிமன்ற கருத்தின் பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும், 19 வயது இளம்பெண் ஒருவரும் பல மாத காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் திடீரென அந்த இளைஞர் தனது காதலியை பிரேக் அப் செய்துள்ளார். ஆனால் காதலிக்கும் சமயத்தில் இருவரும் அவ்வப்போது சந்தித்து தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
மேலும் காதலர்களுக்கு மத்தியில் இருக்கும் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது போன்ற சிறு சிறு ஊடல்களும் இருந்துள்ளது. இதனால் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனிடம் கூறவே, அவர் மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த அந்த இளம்பெண், தன் காதலன் தன்னை காதலிக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்ததாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது ஐபிசி 354ஏ பிரிவின் (Section 354-A(1)(i)) கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று (நவ.15) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதனை விசாரித்த நீதிபதி, மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் வளரிளம் பருவத்தில் (டீன் ஏஜ்) காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுவதாக தெரிவித்தார். .
மேலும் இந்த விவகாரம் IPCயின் 354-A(1)(i) பிரிவின் கீழ் குற்றமாக அமையாது என்றும், எனவே மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மனுதாரர் மீது நடவடிக்கைகளை தொடர்வது, சட்ட துஷ்பிரயோகமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கையும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும் மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
Also Read
-
புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை : “பாஜக அமைச்சர்தான் காரணம்...” முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி!
-
மக்களே உஷார்... Whatsapp-லும் பண மோசடி... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
-
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது : தனிப்படை போலிஸார் அதிரடி!
-
சென்னை கடற்கரை - தாம்பரம்.. ரத்து செய்யப்பட்ட இரயில்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம் -போக்குவரத்து கழகம்!
-
வெளியீட்டுக்காக காத்திருக்கும் 2 படங்கள்.. இயக்குநர் சுரேஷ் சங்கையா உயிரிழப்பு... சோகத்தில் திரையுலகம்!