Tamilnadu

”தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது” : நியூஸிலாந்தில் கம்பீரமாக ஒலித்த அப்பாவு!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 6.11.2024 முதல் 8.11.2024 வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் கலந்துகொண்டு, உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார். பின்பு, கெயின்ஸிலிருந்து புறப்பட்டு நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றடைந்தார். நியூஸிலாந்து நாட்டில், ஆக்லாந்து நகரிலுள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேரவைத் தலைவர் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அப்பாவு உரையாற்றியதாவது:

சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளில் ஏராளமான தமிழர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டில் பட்டம் படித்து, பொறியாளர் என்ற பட்டத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே இருக்கின்ற மொழியோடு நீங்கள் சங்கமம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் கண்டிப்பாக தமிழ் பேச வேண்டுமென்கின்ற அவசியம் இங்கே இல்லை. ஆங்கில மொழியை தமிழ்நாட்டிலேயே கற்றுக் கொண்டுதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உருவாக்கியுள்ளீர்கள். இந்த நாடு ஒரு தூய்மையான நாடாக இருக்கிறது. இந்த நாட்டிற்கு நாம் வேலைக்காக வந்துள்ளோம். இங்கே உங்களை நான் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில்தான், 1996 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத் துறையில், பொறியியல் துறைக்கென்று தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அவர்தான், சென்னையில் டைடல் பார்க்கையும், சிறுசேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவையும் தொடங்கினார். அதற்கு முன்பு வரை, பெங்களூரு தான் தகவல் தொழில் நுட்பத்திற்கான நகரமாக இருந்தது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வசித்தவர்கள் அதைக் கற்று உலகம் முழுவதும் வேலைக்காக சென்று கொண்டிருந்தார்கள். தலைவர் கலைஞர் அவர்கள், சென்னையில் டைடல் பார்க்கையும், சிறுசேரியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவையும் தொடங்கிய பிறகுதான், ஆண்டுக்கு 2 இலட்சம் நபர்கள் அந்தப் பட்டப் படிப்புகளை படித்து முடிப்பதுடன், பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். அந்த வாய்ப்பை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

அந்த காலகட்டத்தில், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே software இருந்தது. தமிழுக்கு கிடையாது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, தமிழில் software, keyboard கொண்டு வரப்பட்டது. இப்போது நம்முடைய அழகு தமிழில் whatsapp-ல், தட்டச்சு செய்து செய்திகள் அனுப்புகிறோம் என்றால் அந்த வாய்ப்பையும் நமக்கு பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

ஒரு மொழியை அழித்துவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும். ஒவ்வாரு காலகட்டத்திலும் தமிழ் மொழியை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று பல்வேறு முயற்சிகள் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விஷயத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை மறக்கவே முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்திய பிறகு, நாடாளுமன்றத்தில் இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வந்த பிறகு, நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்.

தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டார். அப்போது, நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் பேசுகையில், இந்தி மொழியைத்தான் அதிகமான மக்கள் பேசுவார்கள் என்றும், அதனால், இந்தி மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்று சொன்னார்கள். இதற்கு, பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘காக்கை பறவைதான் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. மயில் பறவை குறைவாகத்தான் உள்ளது. ஆனால், நாம் மயிலை தான் தேசிய பறவையாக வைத்துள்ளோம். எனவே, உறுப்பினர் தெரிவித்த ஒப்பீடு நியாயமானதாக இல்லை’ என்று பதிலளித்தார். அவர் குறிப்பிட்டது, நாடாளுமன்ற பதிவேட்டிலேயே இருக்கிறது. எங்கள் மொழிக்குரிய அங்கீகாரம் வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டில், நாங்கள் தமிழை ஆட்சிமொழியாக வைத்துக் கொள்கிறோம். தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை வைத்துக் கொள்கிறோம்.

ஆங்கில மொழியை கற்றுக்கொண்டால் எங்கள் மக்கள் உலக அளவில் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆங்கில மொழியை நாங்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்வோம் என்றார். ஜவஹர்லால் நேரு, பிரதமராக பொறுப்பு வகித்த காலத்தில், ‘இந்தியை நீங்கள்(தமிழர்கள்) ஏற்றுக்கொள்ளாதவரை, தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருக்கும் என்று சொன்னதன் அடிப்படையில்தான், தமிழ் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழியை அழிக்க நினைத்தால் அது யாராலும் முடியாது.

உலகில் தோன்றிய முதல் மூன்று மொழிகள் ஹிப்ரு, லத்தீன், தமிழ் ஆகிய மொழிகள்தான். அந்த மொழிகளில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே மொழி தமிழ் மொழிதான். உலகம் முழுவதும் 10 கோடி மக்களுக்கு மேல் பேசுகிற மொழி. தமிழில் இல்லாத இலக்கியம் இல்லை. வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டுமென்பது குறித்து உலகப் பொதுமறையான திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தில் எந்தப் பாடத்தில் எடுத்து படிக்க சொன்னாலும், அவர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்பதற்கு ஒரு வழியைக் காட்டக்கூடிய நூல் திருக்குறள். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு என பல்வேறு வகையான இலக்கியங்கள் உள்ளது. ஒரு இலக்கை காட்டுவதுதான் இலக்கியம். அது என்ன இலக்கு என்றால், மனித உயிரினம் எவ்வாறு வாழ வேண்டுமென்பதற்கான இலக்கை காட்டிக் கொடுப்பதுதான் இலக்கியம். அதுமாதிரியான எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவையெல்லாம் அரிய பொக்கிஷங்கள் ஆகும். அவற்றையெல்லாம் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

பெண்களுக்கு பல நாடுகளில் வாக்குரிமை கிடையாது. 1921 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் சட்டமன்றம் மதராஸ் பிரசிடென்சி. அதே போல், மும்பை பிரசிடென்சி, கல்கத்தா பிரசிடென்சி என மொத்தம் 3 பிரசிடென்சிகள் இருந்தன. தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் உரிமை கொண்டுவரப்பட்டது. பெண்களையும் காவல் துறையில் பணிக்கு நியமிக்கப்பட வேண்டுமென்று 1931-ல் தந்தை பெரியார், தீர்மானம் இயற்றினார். அதை நடைமுறைப்படுத்தியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். பெண்கள், கணவன் இறந்துவிட்டால், மனைவி உடனடியாக உடன்கட்டை ஏற வேண்டும் என்பதுதான் 1947 ஆம் ஆண்டிற்கு முன்பாக சட்டமாக இருந்தது. திருமலைநாயக்கர் ஆட்சிக் காலத்தில், அவர் இறக்கும்போது, 50 பெண்கள் உடன் கட்டை ஏறுகிறார்கள். ஏனென்றால் அவருக்கு 50 மனைவிகள். திருவாங்கூர் மகாராஜா இறக்கும்போது அவருடைய இரண்டு மனைவிகளும் உடன்கட்டை ஏற்றப்படுகிறார்கள். இந்த மாதிரியான மூடப் பழக்கங்களை நிறுத்த வேண்டுமென்று சட்டத்தைக் கொண்டு வரக் காரணமானவர் தந்தை பெரியார்தான். தமிழ்நாட்டில்தான் முதலில் சட்டம் இயற்றப்படுகிறது. அப்போது 5 வயது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்த காலங்களும் உண்டு. அந்த குழந்தையின் கணவனுக்கு 7 வயது இருக்கும். அவர், இறந்து விட்டால்கூட அந்தப் பெண் குழந்தைக்கு விதவை என்றுதான் பெயர். இந்த மாதிரியான கொடுமை எங்காவது உண்டா? இந்தியாவில் இருந்தது. மொட்டையடித்து அவர்களை வாழ்நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென்று சொல்லி விடுவார்கள். அப்படிப்பட்ட நாட்டில், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டுமென்று பெரியார் சொன்னார். கலைஞர்தான் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமையைத் தந்தவர். பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்று சொன்னது திராவிடம்.

பெண்களை படிக்க வைப்பதற்காக 8 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு 6,000 ரூபாய் கொடுத்தவர் தலைவர் கலைஞர். 10 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு 10,000 ரூபாயும், 12 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயும், பட்டப் படிப்பு வரை படித்த பெண்களுக்கு 50,000 ரூபாயும், கொடுத்தார். இந்தியாவில், பட்டம் படித்த பெண்களுடைய சராசரி, 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதம் ஆக உயர்த்த வேண்டும் என்று ஒரு புதிய கல்விக் கொள்கையை மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் உருவாக்கியிருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில், பெண்கள் தற்போதே 60 சதவிகிதத்திற்குமேல் பட்டம் பெற்றுள்ளார்கள். இந்தியாவில், வேலைக்கு செல்கின்ற பெண்கள் சதவிகிதத்தில் 70 சதவிகித பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். வளர்ந்த நாடுகள், முன்னேறிய நாடுகளையெல்லாம் தாண்டி, தமிழ்நாடு உள்ளது. இங்கு தமிழர்கள்தான் இருப்பதால் நான் இதைச் சொல்கிறேன். பிற மாநிலங்களிலிருந்தும் பொறியாளர்கள் இங்கு வருவார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வருவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பார்த்தால், அனைத்துச் சமூகத்தைச் சார்ந்தவர்களும் படித்து, பட்டம் பெற்று பொறியாளர்களாகவும் வருகிறார்கள். இதை திராவிடம்தான் நமக்கு கற்றுக்கொடுத்தது. இந்தச் சமூகம் கற்றுக் கொடுத்தது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அனைவரையும் மனிதனாகப் பார்க்க வேண்டும். அந்த வழியில் இன்றைய முதலமைச்சர் அவர்கள்தான், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப்போல, சாமானிய வீட்டுப் பிள்ளைகளும் அதுபோல் தரமான கல்வி கற்க வேண்டுமென்பதற்காக பள்ளிக்கு ஒரு smart class room வசதியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். அதோடு மட்டுமல்ல, பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்பதற்காக 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதுபோன்று மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமதி அழகு மீனா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வருகிறார். அவர்கள் வீட்டில் 7, 8 குழந்தைகள். அவர்கள் மிகவும் சாதாரண குடும்பம். அவருடைய தாயார் தன்னுடைய குழந்தை 10 வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டுமென்று சபதம் போட்டு, படிக்க வைக்கிறார். 10 ஆம் வகுப்புக்கு பிறகு 12 ஆம் வகுப்பு வரை படிக்கிறார். ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி கட்டணம் இல்லாமல் கல்வி பயிலலாம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிவிக்கிறார். அந்த திட்டத்தின் அடிப்படையில் திருமதி அழகு மீனா அவர்களும் பட்டதாரி ஆகிறார். இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக உள்ளார். இதுதான் சமூகம்; இதுதான் சமூக நீதி; இதுதான் சமத்துவம்; இதுதான் அனைவருக்குமானது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம்.

அதிகளவிலான குழந்தைகளுக்கு படித்த பிறகு, என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும் இருக்காது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டுமென்று கூறி, படித்தவுடன் வேலைக்குச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.

அயல் நாட்டில் வாழ்பவர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது இங்கு வந்து செல்லும் எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். வறுமை காரணமாக சில நாடுகளுக்கு பணி நிமித்தமாக சென்று விடுகிறார்கள். சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள். விசா இல்லாமல் அவர்கள் மிகவும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

இதுபோன்றவர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கும், ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விடுபவர்களையும் காப்பாற்றுவதற்காக ஒரு தனி துறையை உருவாக்கி, அதற்கென்று தனியாக ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அந்தத் துறைக்கு திரு. நாசர் அவர்கள் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசினுடைய கவனத்திற்கு அவர்களின் பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டால், உலகத்தின் எந்தப் பகுதியில் இருப்பவர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.

நீங்கள் தமிழ்மொழி படிக்க வேண்டுமென்றால் அதை எவ்வாறு படிப்பது? தமிழ்நாடு அரசு அதற்காக அனைத்து உதவிகளையும் செய்து தருகிறது. இணையதளம் மூலமாக தமிழை கற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. Software அல்லது pen drive- மூலமாக தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசிடம் நீங்கள் கோரிக்கை வையுங்கள். நான், commonwealth parliamentary கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவிற்கு வந்தேன். கூட்டம் முடிந்த மறுநாள் விக்டோரியா மாநிலத்திற்கு சென்றேன். என்னுடைய உறவினர் ஒருவர் ஒரு function இருக்கிறது அதற்கு வருகிறீர்களா என்று என்னிடம் கேட்டார். அங்கு நான் சென்றேன். 500 குடும்பங்கள் அங்கே வந்திருந்தன. எனக்கே மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அங்கே ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்து, சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததைவிட ஆசிரியராக இருந்ததைத்தான் இன்று வரை பெருமையாக கொள்கிறேன்.

அங்கு 13 வருடத்திற்கு முன்பாக 11 பேரைக் கொண்டு ஒரு தமிழ் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். தற்போது 350 பேர் அதில் உள்ளனர். அந்த விக்டோரியா மாநில அரசு, வாரத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு பள்ளியில் அந்தந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கு Victoria School of Language (VSL) என்ற அமைப்பு உள்ளது. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட எந்த மொழி படிக்க வேண்டுமென்று சொன்னாலும் அவர்கள் படிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருகிறது. இதுபோன்று இங்குள்ளவர்களும் இந்த அரசிற்கு கோரிக்கை வைக்க வேண்டுமென்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் தமிழ்நாடு மூலமாக என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அவற்றை செய்வதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தயாராக உள்ளார். அதனால், குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுகொடுங்கள்.

இங்குள்ள மருத்துவ வசதிகளை நான் பார்த்தேன். தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ வசதிகளையும் நான் பார்த்துள்ளேன். மருத்துவ வசதியில் தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டி. மறைந்த தலைவர் கலைஞர்தான், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கவேண்டுமென்ற திட்டத்தை உருவாக்கி, கொண்டுவந்தார். இந்தியாவில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் 78 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 11 ஆயிரம் பேர் அதில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டைவிட 4 மடங்கு அதிகமான மக்கள்தொகை உத்தரபிரதேசத்தில் உள்ளது. அங்கே குறைவான அளவிலான மருத்துவக் கல்லூரிகளே உள்ளன. அங்கிருந்துகூட தனி விமானம் மூலமாக நோயாளிகள் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான நோயாளிகள் மருத்துவ தேவைக்காக சென்னைக்குதான் வருகிறார்கள். சிறந்த மருத்துவம் சென்னையில்தான் உள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டத்தின் மூலமாக 50 இலட்சம் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள் இன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். விபத்து ஏற்பட்டு யாருக்காவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு யோசித்த காலம் சென்று, இப்போது மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்ப்பவர்க்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகள் உள்பட சுமார் 900 மருத்துவமனைகள் உள்ளன. விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் 2 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிரைக் காப்பாற்றிவிடுகிறார். வெளிமாநிலம், வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டாலும்கூட அவருடைய உயிரையும் காப்பாற்றி கொடுக்கிறார்.

இந்தியா டுடே என்ற பத்திரிகை இந்தியாவில், ஆளுமைமிக்க தலைவர்களில் மு.க. ஸ்டாலின் எட்டாவது இடத்தில் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கு காரணம், அனைத்துத் துறைகளையும் அவர் ஆய்வு செய்கிறார். அனைத்துத் துறைகளும் அடுத்த இலக்கை நோக்கி செல்வதற்கு தேவையான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார்.

காலத்திற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் tab கொடுக்கப்பட்டுள்ளது. 1920 ஆம் ஆண்டு முதன்முதலாக மதராஸ் பிரசிடென்சிக்கு தேர்தல் நடைபெற்றது. நீதிக் கட்சி அப்போது தேர்தலில் வெற்றி பெற்றது. 1921 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போதுதான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இவ்வாறு பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அன்றுமுதல் இன்று வரை சட்டமன்ற நடவடிக்கைகளில் என்னென்ன நடைபெற்றிருக்கிறது. எந்தெந்த உறுப்பினர்கள் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை இணையதளம் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

தமிழ்மொழிக்குள்ள பெருமை உங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. இந்தியாவில் சிந்து சமவெளியில்தான் முதன் முதலாக நாகரீகம் தோன்றியது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை இல்லையென்று சொன்னது, வட அயர்லாந்தில் பிறந்து, இலண்டனில் படித்து இந்தியா வந்து தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், இடையங்குடியில் வாழ்ந்து மறைந்த ஐயா கால்டுவெல் அவர்கள்தான். 18 ஆண்டுகாலம் பல மொழிகளைப் பற்றி கற்றார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஒரியா உள்ளிட்ட 18 மொழிகளையும் கற்றார். அதன்பிறகு அந்த மொழிகளை ஒப்பிடுகிறார். அதுவரை, சிந்து சமவெளியில்தான் நாகரீகம் தோன்றியது. சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியதுதான் தமிழ் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மாயையை மாற்றி, சமஸ்கிருதத்திற்கு முன்பே தோன்றிய மொழிதான் தமிழ் என்று கூறினார். இங்குள்ள தமிழர்களுக்கு ஒரு நாகரீகம் இருந்துள்ளது என்பதையெல்லாம் கண்டறிந்து, அவர் எழுதிய ஒப்பிலக்கணக்கம்தான் திராவிட மொழி குடும்பம். தமிழ் மொழியிலிருந்து தோன்றியதுதான் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள். இந்தியாவில் தமிழ் மொழிக்குத்தான் முதன்முதலில் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. அதைப் பெற்றுத் தந்தது மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான். அதன் பிறகுதான் மற்ற மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இந்தியாவில் தோன்றிய மொழிகளில் தமிழ் மட்டுமே பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியஸில் தமிழ் ஆட்சி மொழி. மலேசியாவில் கூடுதல் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. இந்தியாவில் ஆட்சி மொழியில் தமிழ் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. அதனால்தான் தமிழ் மொழியை படிக்க வேண்டுமென்று சொல்கிறேன்.

பெரியார், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் ஆகியோரெல்லாம் சிறந்த கல்வி முறையைத் தரவில்லையென்றால் நாம் கல்வியே கற்றிருக்க முடியாது. அதற்கு முன்பாகவும் குருகுல கல்வி முறை இருந்தது. ஒரு குறிப்பிட்ட 10 சதவிகிதம் பேர் மட்டுமே அதில் படிப்பார்கள். அரேபிய மொழி இருந்தது. 5 சதவிகிதம் பேர் பாரசீக மொழி படிப்பார்கள். இந்த 15 சதவிகிதம் பேர் மட்டுமே படிப்பார்கள். பட்டம் பெறுவார்கள். பணியில் அமர்வார்கள். அதிகாரத்தில் இருப்பார்கள். துருக்கி ஆட்சியாக இருந்தாலும், முகலாயர்கள் ஆட்சியாக இருந்தாலும் இவர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்கள் ஆட்சியில் இருந்தாலும், இவர்கள் அதிகாரத்தில் இருப்பார்கள். மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அனைவரும் கல்வி கற்கலாம் என்கிற சட்டம் 1835 ஆம் ஆண்டு வருகிறது. மெக்காலே பிரபுதான் இந்த சட்டத்தைக் கொண்டுவந்தார்.

அதுவரையில் 15 சதவிகித பேர் மட்டுமே கல்வி பயின்று வந்தார்கள். அதுவும் வேதங்களின் அடிப்படையில் கல்வி கற்பிக்கப்பட்டது. மெக்காலே பிரபுதான் புதிய கல்விக் கொள்கைப்படி பாடத்திட்டத்தை உருவாக்கி, அதன்படி கல்வி கற்க வேண்டுமென்று சொல்கிறார்கள். முதல் மொழி தாய் மொழி என்றும், அதாவது Regional Language. மதராஸ் பிரசிடென்சியில் மலையாளம் இருந்தது. தெலுங்கு இருந்தது. கன்னடம் இருந்தது. துளு இருந்தது. அவரவர் அவருடைய தாய் மொழியை படித்துக் கொள்ளலாம். இரண்டாவது மொழி கண்டிப்பாக படிக்க வேண்டும். அதுதான் ஆங்கில மொழி. மூன்றாவது பாடம் கணிதம். நான்காவது பாடம் அறிவியல். ஐந்தாவது பாடம் சமூக அறிவியல், பூகோளம். இதுதான் பாடத்திட்டம். இதைத்தான் நானும் படித்தேன். அனைவருக்கும் கல்வி கற்கலாம் என்ற சொன்னபோதுதான் அந்த 15 சதவிகித பேரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சுதந்திர போராட்டம் தொடங்கினர். அப்போதுதான், சுதந்திர போராட்டமே தொடங்குகிறது. ஏனென்றால், அதுவரையில் அவர்கள் மட்டுமே படித்து அதிகாரத்தில் இருந்தார்கள்.

நான் இந்தியன், பிறப்பால் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அனைவருக்கும் அடையாளம், பெருமை. அதை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழை கற்க வேண்டும். அதற்கு என்ன உதவி வேண்டுமோ அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தயாராக உள்ளார். உங்களது கருத்து மற்றும் கஷ்டங்களை whatsapp மூலம் தெரிவித்தால், உங்களை காப்பதற்காக எவ்வளவு நிதி செலவனாலும் அதை முதலமைச்சர் செய்து தருவதற்கு தயாராக இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Also Read: அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு: மக்களின் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய முதலமைச்சரின் பயணம்!