Tamilnadu

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை புறப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உட்பட 177 பேர் இருந்தனர்.

இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திருப்பதி வான் வெளியில், பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார்.

இதையடுத்து, விமானி அவசரமாக, ஹைதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார். பிறகு கட்டுப்பாட்டுஅறை அதிகாரிகள், திருப்பதி விமான நிலையத்தில், விமானத்தை அவசரமாக தரையிறக்குவது பாதுகாப்பாக இருக்காது என்பதால், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், அவசர தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் உடனே, சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று மதியம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தை பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பழுது உடனே சரி செய்யப்படாது என்பதால், பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம், சென்னையில் இருந்து திருப்பதிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, எடுத்த துரித நடவடிக்கை காரணமாக, 177 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: நயன் vs தனுஷ் மோதல்... “இதுதான் பா அந்த ரூ.10 கோடி கிளிப்..” - வீடியோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிலடி!