Tamilnadu

அரசு விளையாட்டு போட்டி பேனரில் இஸ்லாமிய சின்னமா?: திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி -TN Fact Check விளக்கம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. குறிப்பாக திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சியாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. மேலும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில், இந்துத்துவ கும்பல் மதக்கலவரத்தை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் அவையெதற்கும் தமிழ்நாட்டு மக்கள் மயங்காமல், திராவிட மாடல் அரசு மீது முழு நம்பிக்கையை வைத்துள்ளது. குறிப்பாக இந்த அரசு ஆட்சியமைத்து 3 அரை ஆண்டுகளில் ஏறத்தாழ 2 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பில் பல லட்ச ஏக்கர் கோயில் நிலங்களையும் மீட்டுள்ளது.

இவ்வாறாக எந்த மத, இன வேறுபாடு இன்றி இந்த அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு என்று நன்மை செய்து வருகிறது. எனினும் சில விஷ கிருமிகள், வேண்டுமென்றே கழக அரசு மீது அவதூறு பரப்ப முயன்று வருகிறது. அந்த வகையில் தற்போது பள்ளியில் நடைபெற்ற அரசு விளையாட்டு நிகழ்வின்போது வைக்கப்பட்டிருந்த பேனரில், இஸ்லாமிய சின்னம் இருப்பதாக வதந்தியை பரப்பியுள்ளது இந்து முன்னணி.

அதாவது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் அண்மையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலி வருவாய் மாவட்ட புதிய விளையாட்டுப் போட்டி 2024 - 2025 நடைபெற்றது. இந்த போட்டியில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சூழலில் அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பேனரில் இஸ்லாமிய சின்னம் இருப்பதாக இந்து முன்னணி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலி அரசு நிகழ்ச்சியில் இஸ்லாமிய சின்னம்?? திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விளையாட்டு விழாவில் இஸ்லாமிய மதக்குறியீடான பிறையுடன் கூடிய சின்னம் அச்சிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இது இஸ்லாமிய சின்னம் அல்ல என்றும் அது அந்த போட்டி நடைபெற்ற சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் சின்னம் என்றும் தமிழ்நாடு சரிபார்ப்பு வலைதளம் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து TN Fact Check வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

"திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் இஸ்லாமிய மதக்குறியீடான பிறையுடன் கூடிய சின்னம் அச்சிடப்பட்டுள்ளது" என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

உண்மை என்ன? :

இது இஸ்லாமிய மதச்சின்னம் அல்ல. திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் முத்திரை.

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளித்துள்ள விளக்கத்தில், "மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. எனவே அந்த பேனரில் கல்லூரியின் முத்திரை Venue Sponsor என்ற அடிப்படையில் இடம்பெற்றது. கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தும்போது இது போன்று பயன்படுத்தப்படுவது வழக்கம்" என்று தெரிவித்துள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரியின் சின்னத்தை வைத்து அதனை இஸ்லாமிய சின்னம் என்று குறிப்பிட்டு வதந்தி பரப்ப முயன்ற இந்து முன்னணிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Also Read: “இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48” திட்டம் குறித்து அவதூறு... ஆதாரத்துடன் TN Fact Check விளக்கம்!