Tamilnadu
”திமுக ஆட்சி என்றும் மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2024) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-
கடலாக இருந்து நிலமாகி மனித இனம் தோன்றியதற்கான தடயங்கள் கொண்ட ஊர் இந்த அரியலூர்! அதன் அடையாளமாகத்தான் கல்லங்குறிச்சியில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது. ஒரு காலத்தில், மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்து 'பெரும்புலியூர்' என்று அழைக்கப்பட்ட பகுதி, இந்த பெரம்பலூர்! இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
அரியலூர், ஆற்றல் மிக மாவட்டமாகவும், பெரம்பலூர் பெரும்பலம் கொண்ட மாவட்டமாகவும் அமைய வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற 51 பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன். 26 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 10 ஆயிரத்து 141 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற, 456 பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன். 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 11 ஆயிரத்து 721 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
மொத்தமாகச் சொன்னால், 173 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழாவாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
இந்த விழாவை, அரசுப் பெருவிழாவாக ஏற்பாடு செய்திருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ‘அரியலூர் அரிமா’ மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் ஆட்சியர்களுக்கும், அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!
இந்த விழாவிற்காக மட்டுமல்ல; இன்னும் பல பாராட்டுகளுக்கு தகுதியானவர் நம்முடைய சிவசங்கர் அவர்கள்! 2021 மே 7-ஆம் தேதி, 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று பதவியேற்றேன். பதவியேற்று, கோட்டைக்கு வந்து நான் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கு கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டத்திற்குதான்! உழைக்கும் மகளிர்க்கு உறுதுணையாகவும், அவர்கள் பொருளாதார ரீதியாக உயர அடித்தளமிடும் திட்டமாகவும் இந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல், மகளிர் தற்போது வரைக்கும் 575 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரித்து இருக்கக்கூடிய இந்த மகத்தான திட்டத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றவர்தான், நம்முடைய சிவசங்கர் அவர்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படும்போது பேருந்துகள் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்தார்கள். போதுமான பேருந்துகள் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு போகும் காட்சியெல்லாம் செய்திகளில் தொடர்ந்து வந்தது. இன்றைக்கு நிலைமை மாறி இருக்கிறது!
சமீபத்தில் தீப ஒளி நாள் விடுமுறைக்கு சென்னையிலிருந்து மக்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டபோது, ‘கடைசி பேருந்தும் புறப்பட்ட பிறகுதான் நான் அரியலூருக்கு புறப்படுவேன்’ என்று போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, அரியலூருக்கு வந்தவர்தான் சிவசங்கர் அவர்கள்! எனவே, அவருடைய பணிகளை நான் மனதார பாராட்டுகிறேன்! இதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியும், பெருமையும் இருக்கிறது. ஏனென்றால், சிவசங்கர் அவர்கள், அரசியலில் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய மகன்! என்னால் வார்ப்பிக்கப்பட்ட சிவசங்கர். இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஏராளமான திட்டங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்த அரியலூர் மாவட்டத்தை உருவாக்கிக் கொடுத்தவரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற திட்டங்களைக் கொடுத்தவரும் அவர்தான். கடந்த மூன்றாண்டுகளில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், மாமன்னர் இராசேந்திர சோழனுக்கு புகழ் சேர்க்கும் வகையில் ‘ஆடி திருவாதிரை தினம்’ அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தோம்!
கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம்! இன்று அடிக்கல் நாட்டியிருக்கும் ஜெயங்கொண்டம் காலணி உற்பத்தி தொழிற்சாலை! சுமார் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இந்தத் தொழிற்சாலை மூலமாக அவர்களுடைய வாழ்வாதாரமும், ஜெயங்கொண்டத்தின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும்! இந்த இடத்திற்கு அருகே விளிம்பு நிலையில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு 3.52 ஹெக்டேர் நிலத்தில் இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட இருக்கிறது. 61 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 5 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 9 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய பழங்குடியினர் நலத்துறை மூலமாக ஆணையிடப்பட்டிருக்கிறது.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை ‘மாவட்ட மருத்துவமனையாக’ 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று தற்சமயம் கட்டுமானப் பணிகள் முடிவுற்று இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல்மின் உற்பத்தி திட்டத்திற்காக 2005-ஆம் ஆண்டு வரைக்கும், 13 கிராமங்களில் 8373 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்டது.
ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லை என்று முடிவாகியும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால பிரச்சினையாக இது இருந்தது. இந்தப் பிரச்சினை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததும், அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு, முன்பு கொடுத்த இழப்பீட்டுத் தொகையை திரும்ப வாங்காமல் உரிய நில உரிமையாளரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று 2022-இல் ஆணையை நான் பிறப்பித்தேன்.
இதுவரைக்கும் 6 ஆயிரத்து 808 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான உறுதிமொழிகள் பெறப்பட்டு, 5 ஆயிரத்து 656 ஏக்கர் நிலங்களுக்கு பட்டாவும் வழங்கியிருக்கிறோம். மீதமுள்ள நில உடமையாளர்களுக்கும் பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதுவும் விரைவில் முடியும்.
இது எல்லாவற்றிற்கும் மேல், முக்கியமாக பெரம்பலூர் மாவட்டத்தில், எறையூரில், 243 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ’கோத்தாரி பீனிக்ஸ்’ காலணி உற்பத்தி தொழிற்சாலையை நானே அடிக்கல் நாட்டி, சரியாக ஒரே வருடத்தில் முடித்து, அந்த தொழிற்சாலையை நானே திறந்து வைத்தேன். இது எவ்வளவு பெரிய சாதனை!
அதுமட்டுமல்ல. குன்னம் வட்டத்தில், 100 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். எறையூர் சிப்காட், பாடாலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழங்க, 345 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகத்திலேயே அரிதான பாழ்நிலங்கள் காணப்படும் பகுதியாக பெரம்பலூர் காரை கொளக்கா-நத்தம் பகுதி இருக்கிறது. அங்கு, 411 ஏக்கர் பரப்பளவிற்கு புதைபடிமப் பூங்கா அமைப்பதற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. கவுள்பாளையம் ஊராட்சியில், இலங்கைத் தமிழர்களுக்காக 72 வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. ஊரகப் பகுதியில், 12 பாலங்கள் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கி, 8 பாலங்களை திறந்து வைத்துவிட்டோம். நெடுஞ்சாலைப் பகுதியில் 34 பாலங்கள் கட்டித் திறக்கப்பட்டிருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு திட்டங்களை தீட்டித் தந்தவன் என்பதால் தான் உங்கள் முன்பு நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.
இன்னும் பல திட்டங்களை தீட்டித் தர நினைப்பதால்தான், உங்களை பார்ப்பதற்கு நான் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன். நம்முடைய மாண்புமிகு அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களது கோரிக்கையை ஏற்று, முக்கியமான திட்டங்கள் சிலவற்றை இப்போது இந்த மேடையில் அறிவிக்க இருக்கிறேன்.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் நதியனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வெற்றியூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம் நகரங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அவைகள் மேம்படுத்தப்படும்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 645 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, தடையின்றி போதிய குடிநீர் வழங்கப்படும்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
அரியலூர் வட்டம், வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் துணை சுகாதார நிலையங்களில், வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 35 துணை சுகாதார நிலையங்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.
கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், கூடலூர் ஜமீன்பேரையூர் சாலையில், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சுத்தியிருக்கும் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், 24 கோடி ரூபாய் செலவில் மருதையாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வெங்காய விற்பனை மையம் அமைக்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்தர கல்விப் பயிற்சிகளை வழங்கும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியை மேம்படுத்தும் வகையில், 56 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
அதுமட்டுமல்ல, இன்று காலை அமைச்சர் மற்றும் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நம்முடைய அன்பிற்குரிய திருமாவளவன் அவர்களுடன் அரியலூர் வழக்கறிஞர் சங்கத்தினர் என்னை இன்று காலை சந்தித்தபோது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய வகையில் ஒரு நீதிமன்ற வளாகம் தேவை என கோரிக்கை விடுத்தார்கள். இதனை ஏற்று அரியலூரில் 101.50 கோடி ரூபாய் செலவில் ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திட்டத்தை அறிவித்தோம் – நிதி ஒதுக்கினோம் – அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஓய்வெடுக்க செல்பவன் நான் இல்லை! கடந்த காலத்தில் ஒரு சிலர் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது. தெரிந்தாலும், தெரியாத மாதிரியே, “அப்படியா? டி.வி.யில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன்”-என்று பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்!
நான், பிரச்சினைகளை நேர்கொண்டு நிற்கிறேன். அந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறேன். மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்கள் தீட்டுகிறேன்! திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன்! சொன்னால் – சொன்ன நாட்களுக்குள் திட்டங்களைத் திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்! எங்கள் குறைகளை போக்குவார் என்ற நம்பிக்கையோடு, தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையை, நான் எந்நாளும் காப்பாற்றுவேன்! காப்பாற்றுவேன்! என்று உறுதிதருகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் என்மேலும், தி.மு.க. மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையும் – அளவில்லாமல் பொழியும் அன்பும் – எதிர்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் அல்ல. நிறைய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களது மக்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் வரவேற்பு தருகிறார்கள் என்பதை அவர்களும் பார்க்கிறார்கள். எங்கே, மக்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து நாள்தோறும் மீடியாவின் முன்பு தன்னுடைய பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்.
“2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்ததாகவும்; அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவிற்குப் பிறகு நான்கு ஆண்டு தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும்” - சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு என்று ஒன்றை நடத்தினார் பழனிசாமி அவர்கள். அது உங்களுக்கு தெரியும். 3 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு பேசினார்.
நான் கேட்கிறேன். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்களே… நீங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது? இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? இதையெல்லாம் புள்ளிவிவரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா? வந்தவர்களையும் விரட்டி விட்டார்கள். ஏன் என்றால், கரப்ஷன் – கமிஷன் –
கலக்ஷன். அந்த ஆட்சிக்குப் பயந்து, தமிழ்நாட்டை விட்டு ஓடிச்சென்றவர்கள் பலபேர், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து தொழில் மறுமலர்ச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 31 இலட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில்,
10 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். உடனடியாக அவர்களை தொழில் தொடங்க அனைத்துவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நானே பல திறப்பு விழாக்களுக்கு சென்றுவருகிறேன். கலந்துக்கொண்டு வருகிறேன். திறந்துவைத்துவிட்டு வருகிறேன். இதுதான் நல்லாட்சியின் அடையாளம்!
ஆனால், பழனிசாமி ஆட்சியின் நிலைமை என்ன? “எப்போதுதான் முடியும் இந்த ஆட்சி”-என்று, தன்மானம் உள்ள ஒவ்வொரு தமிழரும் காத்திருந்த நிலையில் தான் இருந்தது பழனிசாமி ஆட்சி. ஆனால், திராவிட மாடல் ஆட்சி என்பது, 'இது எங்களுடைய ஆட்சி! எங்களுக்கான ஆட்சி! எங்கள் வாழ்வை வளம் பெற வைக்கும் ஆட்சி! எந்நாளும் தொடர வேண்டும் தி.மு.க. ஆட்சி’- என்று மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது!
கடந்த வாரம் மேற்கு மண்டலம் - சில நாட்களுக்கு முன்பு தென் மண்டலம் - இன்றைக்கு மத்திய மண்டலம் என்று தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடன் இருக்கிறேன். இப்போது மட்டுமல்ல. கிட்டதட்ட 60 ஆண்டுகளாக நான் மக்களோடுதான் இருக்கிறேன். தேர்தலுக்காக வருபவன் அல்ல நான். உங்கள் தேவைகளை அறிந்து, தீர்த்து வைப்பதற்காக எப்போதும் உடனிருப்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது. அந்த வளர்ச்சியை உறுதிசெய்யத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும், ஒரு அனுபவம் மறக்க முடியாததாக அமைந்துவிடுகிறது. கடந்த வாரம் விருதுநகர் பயணத்தில், ’அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்திற்கு’ நான் சென்றது, என் வாழ்நாள் முழுமைக்கும், மறக்க முடியாததாக மாறிவிட்டது! அந்தக் காப்பகத்திலிருந்த குழந்தைகளுக்காக, நான் கேக், பழம் வாங்கிக்கொண்டு சென்று பார்த்தேன். அவர்களோடு இருந்த ஒவ்வொரு நொடியும், அவர்கள் என் மேல் காட்டிய பாசமும் என்னை உருக வைத்தது! ஒரு முதலமைச்சர் நம்மைப் பார்க்க வருகிறார். ஃபார்மாலிட்டிக்கு பேசவதுபோல் எந்த பாசாங்கும் அந்தக் குழந்தைகளிடம் இல்லை! ”அப்பா…”-என்று அவர்களின் இதயத்திலிருந்து வந்த சொல், என்னுடைய இதயத்தில் ஆழமாக பதிந்தது!
மூன்றாண்டு ஆட்சியில் நிதி நெருக்கடி – திட்டமிட்ட அவதூறுகள் – செயற்கையாக உருவாக்கப்படும் தடைகள் என்று எதையும் பொருட்படுத்தாமல், எதிர்கால தமிழ்நாடு, வளமான நலமான தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்று திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, “விடியல் பயணம்”, “மக்களைத் தேடி மருத்துவம்”, “நம்மைக் காக்கும் 48”-என்று எத்தனையோ முத்திரை திட்டங்களையும் நான் மேடைதோறும் பட்டியலிட்டு சொல்கிறேன். இந்த முத்திரை திட்டங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் பல முத்தான திட்டங்களும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் ”ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம்!”
கழக அரசு அமைந்த ஓராண்டு நிறைவடைந்தபோது, நான் ஆய்வுக்கு சென்றபோது, ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தையைப் பார்த்தேன். அப்போது அதை விசாரித்தபோது, இதுபோல் குழந்தைகள் பிறப்பது அதிகமாகி இருக்கிறது என்று என் கவனத்திற்கு வந்தது. நம்முடைய தமிழ்நாட்டு குழந்தைகள் திடமாக இருக்க வேண்டும் என்று கடந்த 21-05-2022 அன்று நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் முத்தோரை குழந்தைகள் மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வீட்டிற்கே கொண்டுசென்று கொடுத்தோம். தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்ட 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைமைக்குத் திரும்பி இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
இத்துடன் அடுத்தகட்டமாகதான், இன்றைக்கு 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கட்சியைத் தாண்டி, அரசியலைத் தாண்டி, தேர்தலை தாண்டி செய்ய நினைப்பது.
”மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் நான்”-என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். எத்தனை மிக மிக வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். என்னை பொறுத்தவரை, மிக மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
விளிம்புநிலை மக்கள் – பெண்கள் – இளைஞர்கள் - மாணவர்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் பேணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் தங்களுக்குத் தேவையானவற்றை கேட்க முடியாது. அப்படி கேட்க முடியாதவர்களுக்கும் இந்த அரசே முன்வந்து செய்யவேண்டும், அந்த நன்மைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்திற்குத் தேவையான எல்லாவற்றையும், ஒரு தந்தையாக – உங்கள் குடும்பத்தில் ஒருவனாக செய்து கொடுக்கிறேன்.
உங்கள் குழந்தைகள் நாளைக்கு வளர்ந்து நல்ல நிலையை அடையும்போது, அவர்கள் சொல்லவேண்டும். ஸ்டாலின் முதல் முறை முதலமைச்சராக இருந்தபோது, கொண்டுவந்த
“காலை உணவுத் திட்டத்தில்” தினமும் சுவையான உணவு உண்ட, 18 இலட்சம் குழந்தைகளில் நானும் ஒருவன்-என்று அவர்கள் சொல்ல வேண்டும்.
ஸ்டாலின் கொண்டுவந்த, ”ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தால் – எனக்கு சத்தான உணவு கிடைத்தது”-என்று அவர்கள் சொல்ல வேண்டும். ”நான் முதல்வன்” ”தமிழ்ப் புதல்வன்” ”புதுமைப் பெண்” திட்டங்கள் மூலமாக, நானும் என் குடும்பமும் முன்னேற, ஸ்டாலின் ஒரு முக்கிய காரணம் –என்று அவர்கள் சொல்ல வேண்டும்.
நிச்சயம் சொல்வார்கள். அவர்களின் வாழ்த்துகளிலும், அன்பிலும்தான் இந்த ஸ்டாலின் தமிழர்களின் மனதில் என்றும் நிறைந்திருப்பான். எதிர்காலத்திலும் தொடரப்போகும், இந்த திட்டங்களால், வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும்! என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் உறுதியோடு எடுத்துச் சொல்லி என்றைக்கும் உங்களோடு இருக்கக்கூடியவர்கள்தான் நாங்கள். எங்களோடு நீங்கள் நிச்சயமாக, உடனிருப்பவர்களாக இன்றைக்கு இருந்துகொண்டிருக்கிறீர்கள். எனவே, அப்படிப்பட்ட ஆதரவை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த அரசுக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும். துணை நிற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.
Also Read
-
”ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” : UGC தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்!
-
இவர்கள்தான் சாப்பாடு கொடுக்கணும் : ஆர்டர் போட்ட பிக்பாஸ் : இந்த வாரம் வெளியேற போகும் நபர் யார்?
-
அரசு விளையாட்டு போட்டி பேனரில் இஸ்லாமிய சின்னமா?: திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி -TN Fact Check விளக்கம்
-
”கண்ணியத்துடன் பேச வேண்டும்” : சி.வி.சண்முகத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு!
-
மகப்பேறில் குறையும் இறப்பு சதவீதம்... - புள்ளி விவரத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு !