Tamilnadu

பெற்றோர்களே உஷார்... எலி மருந்தால் பலியான குழந்தைகள்... குன்றத்தூரை உலுக்கிய சோகம் !

பொதுவாக அனைவரது வீடுகளிலும் எலி தொல்லைகள் இருப்பது வழக்கம். இதனை சரி செய்ய பலரும் பல விஷயங்களை செய்வர். அதில் மிக முக்கியமானது எலி மருந்து வைப்பது. முன்னாள் எலி ட்ராப் இருக்கும் நிலையில், பலரும் எலி மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் எலி மருந்தை பயன்படுத்திய கும்பத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரி என்ற பகுதியில் கிரிதரன் (34) - பவித்ரா (31) தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஷாலினி (6) என்ற மகளும், சாய் சுதர்சன் (1) என்ற மகனும் உள்ளனர். கிரிதரன், தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டில் எலி அதிகமாக இருக்கும் காரணத்தினால், வீட்டில் எலி மருந்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதன்படி நேற்றும் (நவ.13) எலி மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் வழக்கம்போல் நேற்று இரவு நேரத்தில் அனைவரும் தூங்க சென்றுள்ளனர். அப்போது அந்த அறையில் இருந்த எலி மருந்து இருந்த நிலையில், அவர்கள் ஏசி பயன்படுத்தி தூங்கியுள்ளனர். அந்த நேரத்தில் அங்கிருந்த எலி மருந்தின் நெடி, குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவரையும் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக அனைவர்க்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூச்சுத்திணறலில் தவித்த அவர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 6 மற்றும் 1 வயது இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது கிரிதரன், பவித்ரா ஆகியோர் போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எலி மருந்தை முகர்ந்ததால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இடது கண்ணிற்கு பதில் வலது கண்ணில் அறுவை சிகிச்சை.. உ.பி. மருத்துவரின் அலட்சியத்தால் கதறும் சிறுவன்!