Tamilnadu

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சூரியனார் கோயில் ஆதீன மடம்? : அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 218 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை ஓரம் வசிக்கும் மக்கள், கால்வாய் ஊரும் வசிக்கும் மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கக்கூடிய மக்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக 776 வீடுகள் கட்டப்பட உள்ளது, அதேபோல் தண்ணீர் தொட்டி தெருவில் 700 என்று ஒட்டுமொத்தமாக 1476 குடியிருப்புகளை கட்டமைக்கின்ற பணியை இந்த மாத இறுதியில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்றார்.

இதனயடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனார் கோவில் ஆதின மடம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருமா என எழுப்பட்ட கேள்விக்கு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 60 மற்றும் 60A-யின்படி இதுபோன்று குற்றச்சாட்டுகள் ஏற்படுகிற போது முழுமையான விசாரணை நடத்தி மடத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம்.

மற்றொரு சட்டப்பிரிவில் அவர்களே விரும்பி இந்து சமய அறநிலை துறைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கேட்டுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படும். மடத்தை எடுத்துக் கொள்வதற்கான கடிதத்தை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது நாளைக்குள் முடிவெடுக்கப்படும். மடத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எங்களுக்கு தெரியாது அது குறித்தும் ஆய்வு செய்யப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க தயங்காது” என தெரிவித்தார்.

Also Read: சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்தியா பங்கேற்கவில்லை என்றால், தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு ?