Tamilnadu

சென்னை மக்களுக்கு கவனத்திற்கு: மழை காலங்களில் அரசின் நடவடிக்கைகளை அறிய வருகிறது Early Warning System App!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளில் இருந்து மீள மழைநீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதனொரு பகுதியாக Early Warning System என்று சொல்லக்கூடிய செயலியை சென்னை மாநகராட்சி அண்மையில் புதிதாக உருவாக்கியுள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் இந்த செயலியை அப்டேட் செய்து தகவல்களை பதிவிடுகின்றனர். குறிப்பாக பருவமழை காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தபடியே தெரிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கு மழை பெய்கிறது, அருகிலுள்ள அம்மா உணவகம், மீட்புப்பணி, மோட்டார் பாம்பு செயல்பாடு, மழைநீர் தேங்கியுள்ளதா, என்பது போன்ற பல்வேறு வகையான தகவல்களை பொதுமக்கள் ஒரே இடத்தில் இருந்தபடியே அறிந்து கொள்ளும் படி இந்த Early Warning System செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த செயலி மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு அதன்மூலம் அதிகாரிகள் தகவல்களை உடனுக்குடன் பரிமாறி வருகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கான தேவையை அறிந்துகொள்ளவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்ணும் இதில் பதிவிடப்பட்டிருக்கும். இதை மையப்படுத்தி தேவைகளையும், தகவல்களையும் உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்ளும்படி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி அதிகாரிகள் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்ற பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பௌர்ணமி, வார இறுதி நாட்கள் : தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!