Tamilnadu

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவரின் பிறந்தநாள்... அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை !

தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் 8.11.2024 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

“தேம்பாவணி” என்னும் தமிழ்க் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் ஆனார். கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதே வீரமாமுனிவரின் இயற்பெயர். கிறித்தவ சமயப் பணி செய்வதற்காக, அவர் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். கி.பி.1710இல் இந்தியாவுக்கு வந்தார். கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக, அன்றைய மதுரை மாவட்டம் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியை வந்தடைந்தார்.

தமது சமயப்பணி தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில், தமக்குத் தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்று நன்குணர்ந்த அவர் தமிழகம் வந்து தமிழராகவே மாறி, “தத்துவ போதகர்” என மாற்றிக்கொண்டு, தமிழ்ப்பணி புரிந்த இராபர்ட்-டி-நொபிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரைப் பற்றி இவர் கேள்விப்பட்டு, அவர்போலவே தாமும் இறைப்பணியைச் செய்திட விரும்பியதால், இவர் தமது பெயரைத் “தைரியநாதர்” என்று மாற்றிக் கொண்டார். பின்னாளில் மக்கள் இவரை வீரமாமுனிவர் என்றே அழைத்தனர்.

வீரமாமுனிவர் அவர்கள் தம் தாய்மொழி அல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம். அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றல், கொண்டவராக உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராகத் திகழ்ந்தார்.

இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றினார். தமிழில் சதுரகராதியைப் படைத்ததால், “தமிழ் அகராதியின் தந்தை” என்றே போற்றப்படுகிறார். மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலையும் எழுதியுள்ளார்.

திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.

உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்த வீரமாமுனிவர் அவர்கள் 1747ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே உயிர்நீத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய பெருமைகளைப் போற்றுகின்ற வகையில், தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22.1.2024 அன்று புதிதாக அமைக்கப்பட்ட வீரமாமுனிவர் அவர்களின் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தைத் திறந்து வைத்துச் சிறப்பித்தார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்கள் பிறந்த தினமான நவம்பர் 8 ஆம் நாள் அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “பாஜகவை கூண்டோடு ஓரங்கட்டி விட்டோம்.. நாங்க ஏன் டென்ஷன் ஆகணும்?” - தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி