Tamilnadu

பறக்க தயாராக இருந்தபோது இயந்திர கோளாறு : உயிர் தப்பிய 172 பயணிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 164 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 172 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்த விமானி, விமானம் வானில் பறக்க ஆபத்தானது என்பதை உணர்ந்த உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதோடு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை, இழுவை வண்டிகள் மூலமாக விமானம் நிற்க வேண்டிய இடத்தில் நிறுத்தப்பட்டது. அதோடு விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக முயற்சி செய்தும் விமானத்தை சரிபார்க்க முடியவில்லை. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து பயணிகள் 164 பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கை காரணமாக, விமானம் ஆபத்தில் இருந்து தப்பித்து, விமானத்திலிருந்து 164 பயணிகள் உட்பட 172 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ”மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கும் தெரியும்” : ஒன்றிய அரசிடம் காட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்!