Tamilnadu

தனியார் கல்லூரியில் கூடுதல் கட்டணம் : மாணவியை செமஸ்டர் தேர்வெழுத அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவி லோக்கேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த 2022 ம் ஆண்டு இளங்கலை பொருளாதார பட்டப்படிப்பில் சேர்ந்து 2 ஆண்டுகளில் கல்வி கட்டணமாக 53, 825 ரூபாயை தன்னிடம் வசூலித்துள்ளதாகவும், இது அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்லூரி நிர்வாகம் கடந்த 2022-2023 மற்றும் 2023-2024ம் கல்வி ஆண்டில் மட்டும் சுமார் 2500 மாணவ மாணவிகளிடம் இருந்து 15 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கல்வி கட்டணமாக வசூலித்திருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.அரசு நிதியுதவியின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்வி கட்டணம் செலுத்தில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசின் உயர் கல்வி துறை கடந்த 2007 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசானையை மீறி, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணத்தை வசூலித்திருப்பதாகவும், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கல்லூரி 3 ம் ஆண்டிற்கான பருவத் தேர்வை எழுத தன்னை அனுமதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தியும் தேர்வு எழுத அனுமதிக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த அக்டோபர் 28 ம் தேதி எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.மாணவர்களிடம் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் தன்னை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டு தேவானந்த்,நவம்பர் 6 ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைப்பெறும் கல்லூரி செமஸ்டர் தேர்வை மாணவி லோக்கேஸ்வரி எழுத அனுமதிக்குமாறு வேளச்சேரி தனியார் கல்லூரிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை தள்ளி வைத்தார்.

Also Read: Phone Pe செயலியை பயன்படுத்தி மோசடி : சம்மந்தப்பட்ட நிறுவனங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !