Tamilnadu
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில் எழும்பூர் தொகுதி, சூளை, இராட்லர் தெருவில் உள்ள கிளை நூலகம், திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகம், இராயபுரம் தொகுதி, புதிய வண்ணாரபேட்டை, மொட்டை தோட்டம், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் கிளை நூலகம் ஆர்.கே. நகர் தொகுதி, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெரு கிளை நூலகம் மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் நூலகம், பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நூலகம், துறைமுகம் தொகுதி, ஜார்ஜ் டவுன், சண்முகம் தெரு கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திரு.வி.க. நகர் தொகுதி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனி கிளை நூலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, "முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இந்த மாத இறுதிக்குள் மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும். அந்த பேருந்து நிலையத்தில் 120 பேருந்துகள் நின்று சொல்லக்கூடிய வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் நடத்துநர்கள் தங்குவதற்கான இடங்கள், கழிப்பிட வசதிகள், உணவகங்கள், பாதுகாப்பான குடிநீர் என பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் வரப்பிரசாதமாக இப்பேருந்து நிலையம் அமையும்.
வசை பாடுபவர்களை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மக்கள் நலனுக்கு எவை உகந்ததோ, அதை செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சி வசைப்பாடுகளை பற்றி கவலைப்படாது. வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற அளவிற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மக்கள் பணி நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.
தொடர்ந்து தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடப்படுகிறது என்ற எச்.ராஜா-வின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், “எச்.ராஜா காலையில் எழுந்தால் இரவு வரை சிந்திப்பது என்னவென்றால் இந்த ஆட்சியின் மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஏதாவது ஒரு இடத்தில் அவரை நிரூபிக்க செல்லுங்கள். அப்படி ஏதாவது நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.
எச்.ராஜா கூறுவது அபத்தமானது; ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற காரணத்தினால் இது போன்ற குறைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வதுதான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால்தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.
சொல்லுகின்ற ஆளைப் பொருத்துதான் கருத்துகளுக்கு உண்டான வலு சேர்க்கப்படும். அதுபோன்ற கருத்துகளை சொல்பவர்கள் யார் என்று சிந்தியுங்கள். நீரோட்டத்தில் அடித்து செல்பவர்கள், பெருமழை பெய்தால் எப்படி குப்பை அடித்து செல்லுமோ அதற்கு உண்டான தகுதி உடையவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.
உடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!