Tamilnadu
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
“12 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்!” என தலைப்பிட்டு, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளை எடுத்துரைத்துள்ளது தினத்தந்தி தலையங்கம்.
தினத்தந்தி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “தமிழ்நாடு இப்போது தொழில் வளர்ச்சியில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறது. உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் பெரிதும் துணை நின்றன. தமிழ்நாட்டை ஒரு தொழில் கோட்டமாக உருவாக்கியே தீரவேண்டும் என்ற லட்சியத்தில் அவர் மிக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 31 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2021-ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 1,39,725 இளைஞர்களுக்கும், மகளிருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகள் சென்னையை சுற்றிலுமே தொடங்கப்பட்டு வந்தன. ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில்களெல்லாம் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படவேண்டும், தொழில் வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வந்தார்.
அதனால் தான் இப்போது டைடல் பூங்காக்கள் பல இடங்களில் தொடங்கப்படுகின்றன. அரசு மட்டுமல்லாமல் தனியாரும் இப்போது தமிழ்நாட்டில் மூலை முடுக்கிலெல்லாம் ஏன் குக்கிராமங்களில் கூட தொழில் தொடங்கி அங்குள்ள இளைஞர்களுக்கு .வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக இந்திய பணக்காரர்களில் 46-வது நபராக இருக்கும் ஜோகோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தென்காசியை அடுத்துள்ள மத்தளம்பாறையில் தலைமை அலுவலகம் அமைத்து 700 பேருக்கு மேல் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெருமைமிகு வாய்ப்பை கொடுத்துள்ளார். இதுபோல சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38 ஆயிரத்து 698 கோடி மதிப்பிலான 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 46 ஆயிரத்து 931 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். இந்த தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள், ஊக்கங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த 14 தொழில்களும் ஓரிரு துறைகளை சார்ந்த தொழிலாக அமையாமல் மின்னணு துறையை சார்ந்த குறைந்த மின்னழுத்த பேனல்கள், செல்போன் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உதிரி பாகங்கள், மென்பொருட்கள், பாதுகாப்பு துறைக்கான உபகரணங்கள், மருத்துவ துறையை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்து பொருட்கள், தோல் அல்லாத காலணி உற்பத்தி, எரிசக்தி துறையை சார்ந்த பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோளியா உற்பத்தி, மின் வாகனங்கள், தொலைதொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தொழிற்சாலைகள் அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய 12 மாவட்டங்களில் விரைவில் அமைய இருக்கின்றன.
ஆக தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் அடிகோலியுள்ளது. இனி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுமே தொழில் வளர்ச்சியில் ஏற்றம் காணும்” என பதிவிட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!