Tamilnadu

2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைகளில் தமிழ்நாடு அரசு வழக்குகளில் ஆஜராக அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமித்து தமிழ்நாடு அரசு பொதுத்துறை (சட்டம்) உத்தரவிட்டுள்ளது.

கே.சந்திரமோகன், 1960 ஆம் ஆண்டு அரியலூரில் பிறந்தார். இவரின் தந்தை ஆர்.கருப்பையா அரியலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பள்ளி படிப்பை அரியலூர் முடித்த சந்திரமோகன், சட்டப்படிப்பை திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.

1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், முதலில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றினார். கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2000 ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினராக கடந்த 25 ஆண்டுகளாக உள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவராக செயல்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை ஒன்றிய அரசு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டத்துறை மாநில தலைவராக உள்ளார்.

எம்.சுரேஷ்குமார் கடந்த 1971 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை முத்தையா மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுரேஷ்குமார் 1994 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தீர்ப்பாயங்கள் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு இரயில்வே நிர்வாகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

Also Read: தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!