Tamilnadu
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.11.2024) கொளத்தூர், பெரியார் நகர் 4-வது தெருவில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
என்னை அறிமுகப்படுத்துகின்றபோது நண்பர் சொன்னார்; பேருரையாற்றப் போகிறேன் என்று சொன்னார். பேருரையாற்ற நான் வரவில்லை. உங்களுக்கு எல்லாம் சுருக்கமாக நன்றியுரையாற்றத்தான் நான் வந்திருக்கிறேன். கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் நன்றி என்று சொன்னால்கூட உங்களுக்கெல்லாம் கோபம் வந்துவிடும். நன்றியுரை மட்டுமல்ல, வரவேற்புரை ஆற்றுவதற்கும் எனக்கு தகுதி உண்டு. அந்த வகையில் நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும், பல்வேறு அரசு வேலையாக இருந்தாலும், கட்சி வேலைகளாக இருந்தாலும் அதற்கிடையில் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். அதிலும் கொளத்தூருக்கு மட்டுமல்ல, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நிகழ்ச்சி என்று சொன்னால், அதைவிட அதிகமான உற்சாகம் எனக்கு வந்துவிடுகிறது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படிக்கும் மாணவ, மாணவியர்களைப் பார்க்கும்போது எனக்கு தானாக உத்வேகம் வந்துவிடும். அந்த உத்வேகத்தைப் பெறுவதற்காகதான் நான் அடிக்கடி இங்கு வருவதுண்டு.
கடந்த 2017-ஆம் ஆண்டு தங்கை அனிதா அவர்கள் இறந்தபோது, இறந்தபோது என்று சொல்லக்கூடாது. தற்கொலை செய்துகொண்டபோது, நாம் எல்லோரும் தாங்க முடியாத சோகத்திற்கும் பெரிய வேதனைக்கும் ஆளாகினோம். அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும் என்று நான் நம்புகிறேன்.
நீட் தேர்வு அவரின் கனவை சிதைத்து – அவரின் உயிரை பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று வரையிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு, நாளைக்கு இல்லாவிட்டால் நாளை மறுநாள். அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் நிறைய இருக்கிறது.
இறந்த, மறைந்த, தற்கொலை செய்துகொண்டு நம்மையெல்லாம் மீளாத்துயத்திற்கு ஆளவிட்டுச் சென்ற தங்கை அனிதாவின் நினைவாக, முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில், அதற்கு முதல் வாய்ப்பை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சி மையமாக 2019-ஆம் ஆண்டு நம்முடைய கொளத்தூர் தொகுதியில், இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை நாம் தொடங்கினோம். இந்த அகாடமி பயிற்சியோடு கூடிய இலவச வேலை வாய்ப்பு மையமாக செயல்பட தொடங்கியது. இங்கே இதுவரைக்கும் பன்னிரெண்டு பேட்சுகளில் 974 பெண்களும் – எட்டு பேட்சுகளில் 538 ஆண்கள் என்று இதுவரைக்கும் 1,512 பேர் Tally பயிற்சி முடித்து இலவச மடிக்கணினி பெற்றிருக்கிறார்கள். எட்டு பேட்சுகளில் 2,536 மகளிர் தையல் பயிற்சி முடித்துவிட்டு, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு பெண்களுக்கான Tally பயிற்சியில் 13-ஆவது பேட்சுகளில் 62 பேரும், ஆண்களுக்கான Tally பயிற்சியில் ஒன்பதாவது பேட்சுகளில் 45 பேரும், தையல்பயிற்சி ஒன்பதாவது பேட்சுகளில் 350 மகளிர் என மொத்தம் 457 பேருக்கும் சான்றிதழும் மடிக்கணினி மற்றும் தையல் இயந்திரம் நான் இதையெல்லாம் இந்த நிகழ்ச்சியில் வழங்க இருக்கிறேன். சாதாரண பின்புலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமியானது வாய்ப்பை இன்றைக்கு உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், அடுத்தடுத்த பேட்சுகளுக்கான மாணவர்களும் ஆர்வத்துடன் வந்து சேருகிறார்கள். இதனால் அவர்களின் குடும்பங்களும் பயனடைகிறது.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எப்படி ஏழை எளிய மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே போன்று ஏழை – எளிய மக்களுக்குக் கண் சிகிச்சை அளிக்க, ‘கலைஞர் நூற்றாண்டு கண் மருத்துவமனை’-யை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினோம்.
கடந்த ஓராண்டுகாலத்தில் இந்த மருத்துவமனையில் 7,012 பேர் கண் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு 2,493 பேருக்கு கண்ணாடி வழங்குகிறோம். இப்படி தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி மக்கள் பயன்பெறவும் – கொளத்தூரை முன்னேற்றுவதற்காகவும் ஏராளமான திட்டங்களைச் நாம் செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, ஜெகநாதன் சாலையில், 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “முதல்வர் படைப்பகத்தை” திறந்து வைத்துவிட்டுதான் நான் வந்திருக்கிறேன். இந்த முதல்வர் படைப்பகத்தில், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான கற்றல் மையமும் பணிபுரிவோருக்கான “பகிர்ந்த பணியிடமும்” அமைக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தங்களின் இலட்சியத்தை, இலக்குகளை அடையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து இந்த திராவிட மாடல் அரசு செயல்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலமாக ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள், அவர்கள் அனைத்து நிலையிலிருந்தும் தகுதி உடையவர்களாக உயர்த்துவது தான் திராவிட மாடல் அரசின் இலட்சியம் என்பது நீங்கள் எல்லாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவையெல்லாம் பார்க்கவேண்டும். அது யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த மூன்றரை ஆண்டுகளுக்குள், ஏறக்குறைய 4 ஆண்டுகள் துவங்கப் போகிறது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழி சொன்னோமோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதம் இருக்கக்கூடிய ஒன்றிரண்டு திட்டங்களைக் கூட, தேர்தல் வாக்குறுதியைக்கூட, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டத்தில் உறுதியாக, விரைவாக நிறைவேற்றப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஒரு பக்கம் இளைஞர்களுக்குரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். மாணவ, மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை தந்து கொண்டிருக்கிறோம். மற்றொரு பக்கம் தொழில் முன்னணி மாநிலமாக இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசின் மூலமாக தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இன்றைக்கு பல்வேறு தொழில்முனைவோர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் போட்டிப்போட்டுக் கொண்டு தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் அதற்கு தேவையான மனித ஆற்றலை கல்லூரிகளில் நாம் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தொலைநோக்குச் சிந்தனை கொண்ட அரசாக இந்தியாவிலேயே தலைசிறந்த அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது அனிதா அச்சீவர்ஸ் அகடாமி என்றால் இந்த அரசும், நன்றாக கவனிக்கவும், அச்சீவ் செய்யக்கூடிய அரசாங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு பல அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. எந்தெந்த துறையில், எந்தெந்த மாநிலம் முன்னணியில் இருக்கிறது; எத்தனை சதவிகிதம் இன்றைக்கு பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் புள்ளிவிபரங்களுடன் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த வெளியிடக்கூடிய அறிக்கையில், முதன்மையான இடங்களைப் பெறும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், திட்டங்களை அறிவித்துவிட்டு சென்றுவிடலாம்; அது மிகவும் சாதாரணம்; நிதியைக்கூட ஓரளவுக்கு ஒதுக்கிவிடலாம்; அதுவும் மிகவும் சாதாரணம்; ஆனால் அந்தத் திட்டங்கள் முறையாக நடைபெறுகிறதா? யார் யாருக்கு அந்த பலன் சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்கக்கூடிய அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் காரணம்.
ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தால் மட்டும் போதாது அதைத் தொடர்ந்து கண்காணித்து அதை நிறைவேற்றவேண்டும். நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கோட்டையில் இருந்து மட்டுமல்ல, கோட்டையில் இருந்து உத்தரவிடக்கூடிய அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெறுகிறதா? இல்லையா? என்பதை களத்திற்கு சென்று பார்க்கக்கூடிய ஸ்டாலினாக இன்றைக்கு நான் இருந்து முதலமைச்சராக நான் இருந்து கொண்டிருக்கிறேன். நாளைய தினம் கோவை மாவட்டத்திற்கு செல்கிறேன். எதற்காக செல்கிறேன். அங்கு உருவாக்கப்பட்டிருக்கூடிய திட்டங்களைத் திறந்து வைக்க செல்கிறேன். புதிய புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்போகிறேன். அதுமட்டுமல்ல, இதுவரையில் என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கிறது? என்னென்ன முன்னேற்றத்தில் இருக்கிறது என்பதை ஆய்வு செய்யப்போகிறேன். கட்சிப்பணி ஆய்வு அது ஒரு பக்கம். அதேநேரத்தில், அரசின் சார்பில் அறிவிக்கப்படக்கூடிய திட்டங்கள் எல்லாம் எந்த அளவிற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; நடைபெறப் போகிறது; அது எந்த நிலையில் இருக்கிறது; ஆய்வு செய்து, அதை விரைவுப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட ஆலோசனை செய்ய இருக்கிறேன். இப்படியான செயல்பாடுகள்தான் தமிழ்நாடு அரசின் அச்சீவ்மென்டாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இதே சென்னை மாநகரத்தில் கூட மழையைப் பார்த்தோம். ஏற்கனவே, எத்தனையோ மழையை பார்த்திருக்கிறீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவதற்கு முதலமைச்சரை தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் சென்னையே மூழ்கியது. எத்தனை பேர் பலி வாங்கப்பட்டார்கள். எத்தனையோ குடும்பங்கள் அழிந்து போனது. என்னென்ன உடைமைகள் எல்லாம் போனது. எத்தனை வீடுகள் இடிந்து விழுந்தது. அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். நான் அந்தப் பிரச்சனைக்கு அதிகம் செல்ல விரும்பவில்லை.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபிறகு, திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, அதையெல்லாம் இன்றைக்கு கண்காணிக்கக்கூடிய முதலமைச்சர் மட்டுமல்ல, துணை முதலமைச்சர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கவுன்சிலர்கள் மட்டுமல்ல, இந்த அரசோடு தங்களை உட்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் இன்றைக்கு எந்த அளவுக்கு மழை வெள்ள பணியில் பங்கெடுத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் பெய்த மழையில்கூட காலையில் பெய்த மழை, இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழை, அடுத்த நாள் பார்க்கின்றபோது சாலையில் மழைநீர் தேங்கவில்லை என்ற செய்திதான் பத்திரிகைகளில் பார்த்தோம். கண்கூடாக நீங்களும் பார்த்தீர்கள். ஆனால், சில சமூக ஊடகங்களில் என்ன செய்கிறார்கள் என்றால், கடந்த ஆண்டு மழைநீர் தேங்கியிருந்த படத்தை போட்டு, பார்த்தீர்களா, பார்த்தீர்களா, இந்த ஆட்சியில் தண்ணீர் தேங்கியிருக்கிறது; ஒரு மழைக்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று சில ஊடகங்களில், நான் எல்லா ஊடகங்களையும் சொல்லவில்லை, யாரும் கோபித்துக் கொள்ளவேண்டாம். ஏனென்றால் திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதுதான் காரணம்.
அதனால் யார் யாரோ வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சியைத் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக ஒழியவேண்டும்; அழிய வேண்டும். அந்த நிலையில்தான் போய்க்கொண்டு இருக்கிறார்களே தவிர, நான் அவர்களை எல்லாம் பணிவோடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த மூன்றரை ஆண்டு காலத்தில், நான்கு ஆண்டுகள் தொடக்கூடிய இந்த நிலையில், இந்த ஆட்சி செய்திருக்கின்ற சாதனைகளை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், அண்ணா சொல்வார் “வாழ்க வசவாளர்கள்” என்று சொல்லாம். அதுதான் நான் சொல்லமுடியும்.
நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவேயில்லை. எங்கள் போக்கு, மக்களுக்கு நன்மைகள் செய்யக்கூடியதுதான். தேவையில்லாமல் எல்லாருக்கும் நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமேயில்லை. தேவையும் இல்லை. எங்கள் நேரத்தை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்ற அதற்கே எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆகவே, நீங்கள் எந்த நம்பிக்கையோடு எங்களை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கையோடு உங்களுக்காக பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்.
அந்த நிலையில் தொடர்ந்து உங்களுக்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்தப் பயிற்சிகளை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று அதன் மூலமாக பொருளாதாரத் தன்னிறைவை அடைந்து வாழ்வில் நீங்கள் எல்லாம் சிறக்க வேண்டும், சிறக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இந்த நேரத்தில் என்னுடைய பணிவான வேண்டுகோளை மாத்திரம் மட்டுமல்ல, உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் இந்த நேரத்தில் தெரிவித்து விடை பெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!