Tamilnadu

தீபாவளி கொண்டாட்டம்: கடந்த ஆண்டை விட சென்னையில் குறைந்த காற்று மாசு - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் !

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்வர். ஆனால் பட்டாசு வெடிக்கும்போது சிலர் ஆர்வக் கோளாறில் தங்கள் கைகளில் வைத்தும், பிறர் மீது எறிந்தும் பட்டாசு வெடிப்பர். இதனால் ஆண்டுதோறும் தீ விபத்துகள் ஏற்படும்.

இந்த தீ விபத்துகளை தடுப்பதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பட்டாசை பாதுகாப்பாக வெடிக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுவதும் வழக்கம். அதன்படி காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக பட்டாசு வெடிப்பதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 4 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று (அக்.31) கொண்டாடப்பட்ட நிலையில், இதனை முன்னிட்டு மக்கள் பலரும் அரசு கூறிய நேரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

இதன் எதிரொலியாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைவாக பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது காற்றின் தரக்குறியீடு குறித்து பரிசோதித்து பார்க்கப்படும். அந்த வகையில் சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் வெடித்த பட்டாசுகளால் ஏற்படும் காற்றின் மாசு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து மேற்கொண்ட விழிப்புணர்வின் பலனால் காற்று மாசு குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்படும் காற்றின் தரக்குறியீடு வைத்து பார்க்கும்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்துள்ளது.

குறிப்பாக சென்னையில்,

= > ஆலந்தூர் :

கடந்த ஆண்டு - 230

இந்த ஆண்டு - 222

= > அரும்பாக்கம் :

கடந்த ஆண்டு - 251

இந்த ஆண்டு - 168

= > கொடுங்கையூர் :

கடந்த ஆண்டு - 124

இந்த ஆண்டு - 106

= > மணலி :

கடந்த ஆண்டு - 313

இந்த ஆண்டு - 113

= > இராயபுரம் :

கடந்த ஆண்டு - 242

இந்த ஆண்டு - 87

அதே போல் நேற்று இரவை விட சென்னையில் காற்றின் தரக் குறியீடு பல்வேறு இடங்களில் குறைந்துள்ளது.

நேற்று இரவு 10 மணி நிலவரப்படி ஆலந்தூர் பேருந்து நிலையத்தில் 259 ஆக இருந்த காற்றின் தர குறியீடு 6 மணி நிலவரப்படி 222 ஆக குறைந்துள்ளது.

* அரும்பாக்கத்தில் 231 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு 168 ஆக குறைந்துள்ளது.

* கொடுங்கையூரில் 147 தர குறியீடு இன்று காலை 106 ஆக குறைந்துள்ளது.

* மணலியில் தரக் குறியீடு 176 இன்று காலை 113 ஆக குறைந்துள்ளது.

* பெருங்குடியில் 277 ஆக இருந்த தர குறியீடு 234 ஆக குறைந்துள்ளது.

* இராயபுரத்தில் 154 ஆக இருந்த தர குறியீடு 87 ஆக குறைந்துள்ளது.

* வேளச்சேரியில் நேற்று 250 காற்றின் தர குறியீடு இன்று 222 ஆக குறைந்துள்ளது.

Also Read: தீபாவளி கொண்டாட்டம் : தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவில் தீ விபத்து!