Tamilnadu

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம் : வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 01.01.2025-ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2025-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (01.01.2007-ஆம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7 ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம்-8 ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 29.10.2024 முதல் 28.11.2024 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மேலும் நவ.16, நவ.17, நவ.23, நவ.24 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அந்த முகாம் நாட்களையும் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

* அதோடு பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல் .நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள (http://voters.eci.gov.in) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

* சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

* அதிகபட்சமாக - பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக - எழும்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்த ஆண்டு ஏற்கனவே 27.03.2024 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி,

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 19,28,461

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 19,95,484

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை - 1,199 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 39,25,144 ஆகும்.

* நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில்,

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 19,41,271

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 20,09,975

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை - 1,252 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 39,52,498 பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

* மேலும், ஆண் வாக்காளர்கள் - 25,628

பெண் வாக்காளர்கள் - 27,669

இதர வாக்காளர்கள் - 62 என மொத்தம் 53,359 வாக்காளர்களின் பெயர்கள் புதியதாக பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

* மேலும் ஆண் வாக்காளர்கள் - 12,818

பெண் வாக்காளர்கள் - 13,178

இதர வாக்காளர்கள் - 9 என மொத்தம் 26,005 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் -1,76,197 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் - 3,12,912 வாக்காளர்களும் உள்ளனர்.

Also Read: முத்துராமலிங்கனாரின் 117-வது பிறந்த நாள்... அவரது நினைவிடத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர்!