Tamilnadu

“கலைஞர் 100 பேச்சு போட்டியில் பெண்களே அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்...” : துணை முதல்வர் உதயநிதி நெகிழ்ச்சி!

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் “என் உயிரினும் மேலான...” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 182 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில், இதில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களை கழகத்திடம் ஒப்படைக்கும் பெருமைமிகு நிகழ்ச்சி இன்று (அக்.27) சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி-க்கள், கழக நிர்வாகிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய தலைமை உரை வருமாறு :

“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் என் உயிரினும் மேலான கலைஞரின் நூற்றாண்டு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற முதல் 3 மாணவர்களை கழகத்திடம் ஒப்படைக்கும் பெருமைமிகு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கழகத் தலைவர் முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட நமது இளைஞர் அணியின் மறக்க முடியாத ஒரு பொன் நாள் இன்று. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி கழகத்தில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு செயல்களை செய்யக்கோரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்த வகையில் இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பேச்சு போட்டி நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறக்கூடியவர்களை கழகத்திடம் ஒப்படைக்க கூறி உத்தரவு பிறப்பு அளித்திருந்தார்.

குறிப்பாக கழகத் தலைவர் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பேச்சுப்போட்டி பெயருக்கு நடத்தாமல் பிறரும் பயனடைய கூடிய வகையில் நடத்தி காட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த பேச்சு போட்டியில் 17 ஆயிரம் பேர் மொத்தமாக விண்ணப்பத்தை அளித்திருந்தார்கள். இது குறிப்பாக மாவட்டம் வாரியாக 85 நடுவர்கள் இந்த பேச்சுப் போட்டிக்கு நியமனம் செய்யப்பட்டார்கள்.

பல பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு நான் மிகவும் ரசித்தேன் உண்மையில் இங்கே தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக பேசி உள்ளார்கள். சரியான போட்டியை நடத்தி சரியான பேச்சாளர்களை இனம் கண்டு கழகத்திடம் ஒப்படைக்கிறோம் என்கின்ற ஒரு மன நிறைவு எனக்கு உண்டு. கழகத்தை சேர்ந்த அனைவரும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்தார்கள்.

இதன் காரணமாக தான் 17,000 விண்ணப்பங்களில் 913 பேர் தேர்ச்சி பெற்று மண்டல வாரியாக பேச்சு போட்டி நடத்தப்பட்டது. மண்டல அளவில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு 5 தலைப்புகள் வழங்கப்பட்டது. மண்டல அலுவலக போட்டியில் 913 பேரில் 182 பேர் தேர்ச்சி பெற்ற மாநில அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிக்கு தேர்ச்சி பெற்றார்கள்.

குறிப்பாக இந்த பேச்சு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வெற்றியாளர்கள் தான். ஆனால் மூன்று பேருக்கு மட்டும் தான் பரிசு அளிக்க முடியும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோக நிதி, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவரஞ்சனி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்வா ஆகிய 3 பேருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகப்பெரிய கனவுடன் மிகக் கடின உழைப்புடன் இந்த போட்டியை நடத்தி முடித்து உள்ளோம். குறிப்பாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தேவையான உதவிகளையும் வசதிகளையும் இளைஞர் அணி சார்பில் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்.

குறிப்பாக இந்த பேச்சு போட்டியில் பெண்கள் தான் அதிக அளவில் பங்கேற்று உள்ளார்கள். எங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து இந்த போட்டிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வருகின்ற ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியை நடத்த கழக தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இங்கு உள்ள அனைத்து பேச்சாளர்களும் இடி மின்னல் மழை போன்று உருவாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கடந்த வருடம் 234 சட்டமன்ற தொகுதிகளும் திராவிட பாசறை கூட்டங்களில் நடத்தி முடித்து உள்ளோம். குறிப்பாக முத்தமிழறிஞர் பதிப்பகம் தொடங்கி 9 புதிய நூல்களை வெளியிடுகிறார், நமது கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர். கழக இளைஞர் அணியை ஊக்குவிக்கும் வகையில் துணை நின்று நமது முதலமைச்சர் பல்வேறு செயல்களை செய்து வருகிறார். தமிழகத்தின் திராவிட முன்னேற்றத்தின் அடுத்த பேச்சாளராக வந்துள்ள உங்கள் அனைவரையும் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையாக உள்ளது. இனிமேல் இதுபோன்று தான் எங்களுடன் இணைந்து நீங்களும் பயணம் செய்ய உள்ளீர்கள்.

குறிப்பாக தலைமைக் கழக பேச்சாளர்களை மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் தான் ஒருங்கிணைப்பார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட கழக செயலாளர்கள் இந்த 182 பேச்சாளர்களையும் தொடர்ந்து பயன்படுத்தி அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பு செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Also Read: ‘என் உயிரினும் மேலான...’ - பேச்சுப் போட்டியின் முதல் 3 வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் முதலமைச்சர் !