Tamilnadu
“இதுதான் திமுகவின் ஆயுதம்... எந்த கொம்பனும் திமுகவை அசைக்க முடியாது...” - அமைச்சர் துரைமுருகன்!
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் “என் உயிரினும் மேலான...” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 182 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில், இதில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களை கழகத்திடம் ஒப்படைக்கும் பெருமைமிகு நிகழ்ச்சி இன்று (அக்.27) சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி-க்கள், கழக நிர்வாகிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஆற்றிய சிறப்புரை வருமாறு :
முத்தமிழ் அறிஞர் பதிப்பகம் சார்பில் 9 நூல்களை கொடுத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் படித்துக் காட்டச் சொன்னார். குறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பேச்சுப்போட்டியில் பலரும் போட்டி போட்டு கொள்கைகளை பரப்பக்கூடிய வகையில் பேசியதை கேட்டு நான் மிகவும் மன நிறைவடைந்தேன். கொள்கை எழுத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரே ஒரு கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
எழுத்தும், பேச்சும்தான் திமுகவின் ஆயுதம். இதனை வைத்தே ஆட்சியை பிடித்த ஒரே ஒரு கட்சி திமுக மட்டும்தான். ஆகையால்தான் கழகம் ஆட்சிக்கு வந்தவுடனே ‘வாய்மையே வெல்லும்’ என்ற வாக்கியம் வந்தது. ‘வாய்மையே வெல்லும்’ என்றால் என்ன என்று நிரூபர் ஒருவர் கேள்விக்கு, ‘வாய்’ என்பது பேச்சையும், 'மை' என்பது எழுத்தையும் கொண்டு வெற்றி பெறுவது என அறிவுபூர்வமாக சொன்னவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர்.
எங்களுக்குப் பிறகு இளம் பேச்சாளர்கள் தேவை என பார்த்தேன் ஆனால் இன்று இதை பார்த்த பின்பு எனக்கு மன நிறைவு ஏற்பட்டது. சேற்றில் வளரக்கூடிய பயரை நல்ல முறையில் வளர்த்தால் மட்டும்தான் அவை நல்ல வளர்ச்சியை கொடுக்கும். இதனை நமது கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் மிகவும் அற்புதமாக செய்து காட்டியுள்ளார்.
கழக இளைஞரணி என்பது நமது தளபதியால் உருவாக்கப்பட்ட ஒரு அணி. அவர் அந்த இளைஞர் அணியை மிகவும் சாதாரணமாக உருவாக்கவில்லை. பல்வேறு பணிகளை செய்து இளைஞரணியை உருவாக்கியுள்ளார் நமது தளபதி. அந்தப் பொறுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாற்றும் பொழுது அவர் அதே பணியை செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அதைவிட மிகவும் சிறப்பாக செயலாற்றி உள்ளார் என்பதற்கு இந்த பேச்சுப்போட்டி ஒரு உதாரணம்.
குறிப்பாக பேச்சுப் போட்டியில் பேசுவது என்பது மிகவும் எளிதான ஒன்றல்ல. பேச்சாளர்களுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்திருப்பார்கள் அவர்கள் பல்வேறு சிந்தனைகளில் அமர்ந்திருப்பார்கள் அதை எல்லாம் தாண்டி தான் பேச்சாளர்கள் பேச வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த பேச்சு போட்டியில் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களில் மேலும் ஒரு போட்டி நடத்தி அதிலும் வெற்றி பெற்றவர்கள் இங்கு கொண்டு வந்து முதல் மூன்று நபர்களை கழகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு பிறகும் பல எழுத்தாளர்கள் உருவாகினார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு சில காலங்களுக்குப் பிறகு அந்த எண்ணங்கள் போய்விட்டது. இன்றைய காலகட்டத்தில் இந்த எண்ணங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மிகவும் குறைய தொடங்கிவிட்டது. குறிப்பாக யார் அதிக அளவில் படிக்கிறார்களோ அவர்கள் மிகவும் அற்புதமாக பேசக்கூடியவர்களாக உள்ளார்கள். எனவே இன்றைய இளைய சமுதாயம் எழுத்து பேச்சு இரண்டும் நமது கழகத்தின் ஆயுதம் என்பதை எண்ணத்தில் கொண்டு செயலாற்றிய துணை முதலமைச்சர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அளவுக்கு தேவையான விஷயங்கள் வேண்டுமோ அவை அனைத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்துகளில் உள்ளது. இளைஞர் ஆகிய நீங்கள் நிறைய படியுங்கள். படித்ததை மனப்பாடம் செய்யுங்கள் மனப்பாடம் செய்ததை பிறருக்கும் பகிருங்கள். இன்றைக்கு என்ன ஒரு மனைவியுமான விஷயம் என்றால் இனி திமுகவின் பலத்தை எந்த ஒரு கொம்பனும் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக எதையும் விவாதத்திற்கு தயார் என எதிர் கொள்ளக் கூடியவர்கள் இங்கு உள்ளார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இப்படி பல பேர் தேவை. அப்படி இல்லை என்றால் பலருக்கும் வரலாறு தெரியாமல் போய்விடும். குறிப்பாக வரலாற்றை மறந்த சமுதாயம் பைத்தியக்காரன் சமுதாயம். ஆக அனைவரும் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் மனப்பாடமும் செய்து கொள்ள வேண்டும். அனைவரும் தியாகத்துக்கு தயாராக இருங்கள். ஒரு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 30க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவந்தது. கொள்கைகளில் அழுத்த வேண்டும். அப்படி இருந்தால் தான் கட்சியில் தாக்கப் பிடிக்க முடியும். தலைவர் இடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருங்கள்.
Also Read
-
கடந்த ஆண்டை விட தீபாவளி விற்பனை ரூ.10 கோடி அதிகம் : சாதனை படைக்கும் ஆவின் நிர்வாகம் !
-
ஒரே நாளில் 2.31 இலட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்! : தீபஒளித் திருநாள் எதிரொலி!
-
திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு !
-
ஒரே நேரத்தில் இரு கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள்! : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
“முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!”: முதலமைச்சர் உறுதி!