Tamilnadu
நெசவாளர்கள் கூலி உயர்வு விவகாரம் : பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி சரமாரி பதிலடி!
வேலூர் சரக கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி வேண்டும் என, அதிமுக சார்பில், 28.10.2024 அன்று குடியாத்தத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் பதிலடி
வேலூர் சரகம், குடியாத்தம் பகுதியில், 34 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் 60s x 40s லுங்கி இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில், கூட்டுறவு நெசவாளர்களுக்கு, ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்த நெசவுக்கூலி ரூ.1742/- வழங்கப்பட்டு வருகிறது. இந்த லுங்கி இரகங்களுக்கு எதிர்வரும் தீபாவளி, கிறுஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகளின் பொருட்டு வெளிச்சந்தையில் விற்பனை வரவேற்பு அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை ஏற்றும், கூடுதல் ஊக்கத் தொகையாக (Incentive) ஒரு பாவுக்கு (8 லுங்கிகளுக்கு) மொத்தம் ரூ.360/- வழங்கி, மொத்த நெசவுக் கூலி ரூ.2102/- என கைத்தறி நெசவார் கூட்டுறவு சங்கங்களுக்கு 16.10.2024 முதல் அனுமதி அளித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மேற்படி நெசவு கூலி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட ஆர்ப்பாட்டம் தேவையில்லாததும், அர்த்தமற்றதும் ஆகும்.
=> கூலி உயர்வு :
கைத்தறி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும், அவ்வப்போது உயர்ந்து வரும் சந்தை நிலவரத்தினை கருத்தில் கொண்டும் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி நெசவு தொழில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் அவ்வப்போது அடிப்படைக்கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றவுடன் ஆண்டுதோறும், கீழ்க்கண்டவாறு கூலி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கூலி உயர்வு வழங்கப்பட்ட நாள் : 01.01.2022 ; அடிப்படை/ அகவிலைப்படி கூலி உயர்வு சதவிகிதம் : அடிப்படைக் கூலியில் (Basic Wages) 10% உயர்வு மற்றும் அகவிலைப்பயில் (DA) 10% உயர்வு
கூலி உயர்வு வழங்கப்பட்ட நாள் : 01.05.2023 ; அடிப்படை/ அகவிலைப்படி கூலி உயர்வு சதவிகிதம் : அடிப்படைக் கூலியில் (Basic Wages) 10% உயர்வு
கூலி உயர்வு வழங்கப்பட்ட நாள் : 01.08.2024 ; அடிப்படை/ அகவிலைப்படி கூலி உயர்வு சதவிகிதம் : அகவிலைப்படியில் (DA) 10% உயர்வு.
=> கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஊதியம் :
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த 405 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய, 27.06.2022-இல் அரசாணை வெளியிடப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 1033 நிரந்தர பணியாளர்களுக்கு 31.05.2022 முதல் 15% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் அயல் பணியில் மேலாண்மை இயக்குநர்கள் / செயலாட்சியர்களாக, பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்களின் ஊதியத்தினை அரசே வழங்க 15.12.2022-இல் அரசாணை வெளியிடப்பட்டு, இவர்களின் ஊதியத்தினை அரசே ஏற்று வழங்கி வருகிறது. இதனால், சங்கங்களின் நிதிச்சுமை குறைக்கப்பட்டு இலாபத்தில் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
=> மருத்துவ காப்பீட்டுத் திட்டம் :
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கைத்தறி நெசவாளர்கள் / கைத்தறி தொழிலாளர்கள் உட்பட சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள். அவற்றில், 84,526 கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் இணைக்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தினை, ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,300 கோடி செலவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.5.00 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிக்சை பெற்று வருகின்றனர். இத்திட்டம், அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள், மற்றும் மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலம் தழுவிய அளவில் நெசவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த ஜூலை 2023 முதல் ஜனவரி 2024 வரையில் தமிழகமெங்கும் கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக வசிக்கும் பகுதிகளில் மொத்தம் 118 சிறப்பு மருத்துவ முகாம்கள் (Special Medical Camps) நடத்தப்பட்டு, 34873 நெசவாளர்கள் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம், நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
=> தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழகம் மூலமான நூல் கொள்முதல் :
பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி மற்றும் கலப்பின நூல் ஆகிய நூல் கொள்முதலுக்கு 15% விலை மானியத்துடன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நூல்கள் அங்கீகரிக்கப்பட்ட நூற்பாலைகளிலிருந்து தரமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தரப்பரிசோதனை செய்யப்பட்டு கைத்தறி துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நூல்கள் தரமற்றவை என தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
=> கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் முன்னெடுப்பு நடவடிக்கைகள் :
கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் முன்னெடுப்பு நடவடிக்கைகள் கைத்தறி தொழிலை பாதுகாக்கவும், கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலனை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் கீழ்கண்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* கைத்தறி துணி விற்பனையை ஊக்குவிக்கவும், தனியார் சந்தைகளின் போட்டியினை சமாளிக்கவும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தள்ளுபடி மானியத் திட்டத்தின்கீழ் (Rebate Subsidy Scheme) ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.250.00 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
* கடந்த ஆட்சியில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படாமல் விட்டுச் சென்ற நிலுவைத் தொகை ரூ.160 கோடியினை, இக்கழக அரசு பொறுப்பேற்றவுடன் 2021இல் இம்முழுத்தொகையினையும் ஒப்பளிப்பு செய்து விடுவித்துள்ளது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில், இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்து இதுவரை ரூ.794.25 கோடி வழங்கப்பட்டுள்ளது இவ்வரசின் சாதனை ஆகும்.
* தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெறும் நடைமுறை மூலதன கடன் தொகைக்கான வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியம் (Interest Subsidy) சங்கங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.14.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
* கைத்தறி நெசவாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இரு மாதங்களுக்கு ஒருமுறை 300 அலகுகள் வரை இலவச மின்சாரம் (Free Electricity) வழங்கப்படுகிறது.
* கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் இது வரை கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.29.04 கோடி மதிப்பில் 30,227 தறிகள் மற்றும் தறி உபகரணங்களும், (Looms and Accessories) மற்றும் 434 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.30 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
* 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom parks) அமைக்க அரசால் திட்டமிடப்பட்டு, தற்போது காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 இரண்டு இடங்களில் கைத்தறி பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* ஆரணி பகுதியில் 5000 பட்டு நெசவாளர் பயன் பெறும் வகையில் 20.53 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.74 கோடி செலவில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா (Handloom Silk Park) நிறுவப்படவுள்ளது.
* நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் (Weavers Mudra Scheme) கடந்த 3 ஆண்டுகளில், 37,455 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.191.67 கோடி, வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக செயல்படுத்தி வருகிறது.
* கைத்தறி துறையால் செயல்படுத்தப்படும் அரசின் சீரிய திட்டங்களான வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்கான சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
* கைத்தறி நெசவாளர்களுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1000/- லிருந்து ரூ.1200/- ஆக 01.08.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
* நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள் சேமிப்புத் தொகை முழுவதையும் பெறுவதற்கான கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக 05.07.2023 முதல் குறைக்கப்பட்டுள்ளது.
* கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.4.00 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 496 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல், மேற்குறிப்பிட்டுள்ளவாறு, கைத்தறி நெசவுத் தொழிலையும், கைத்தறி நெசவாளர்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், எவ்வித கொள்கையும், கோட்பாடும் இல்லாத வகையில், சுய இலாபம் மற்றும் வெற்று விளம்பரத்திற்காக இவ்வாறான மலிவான அரசியலில் ஈடுபடுவதை இனிமேலாவது கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!