Tamilnadu

நூதன முறையில் தங்கம் கடத்தல்... சென்னை விமான நிலையத்தில் 1.24 கிலோ தங்கம் பறிமுதல் !

துபாயில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலைய வருகை பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை, துபாயில் இருந்து, சென்னைக்கு வந்த விமானம் ஒன்றில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த தனியார் பயணிகள் விமானத்தில் வந்துவிட்டு, இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் செல்ல இருந்த, இலங்கையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர் மீது, சந்தேகம் ஏற்பட்டது.

இதை அடுத்து அவரை ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அந்த இலங்கை பயணி விமானத்திலிருந்து இறங்கி வந்து, டிரான்சிட் பயணிகள் இருக்கும் பகுதியில் வந்து அமர்ந்தார். அதன் பின்பு அவர், டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்கு சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தார். இதை ரகசியமாக கண்காணித்த சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த கழிவறைக்குள் சென்று பார்த்தனர். அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் கட்டப்பட்ட பார்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சுங்க அதிகாரிகள் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்த போது, பேஸ்ட் வடிவிலான தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அதில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்புடைய 1.24 கிலோ தங்கம் இருந்தது.

இதை அடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள்,டிரான்சிட் பயணிகள் பகுதியில் இருந்த இலங்கை பயணியை, சுங்க அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அதோடு கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பார்சலை, வெளியில் எடுத்து செல்ல இருந்து யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : புதுச்சேரி பாஜக MP- க்கு தொடர்பு !