Tamilnadu

இன்று இரவு கரையை கடக்கிறது "டானா" புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல் !

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு "டானா" புயல் பெயரிட்டுள்ள நிலையில், இந்த புயல் ஒடிசா - மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த புயல் ஒடிசா பாரதீபுக்கு தென்கிழக்கே சுமார் 210 கிமீ தொலைவில், ஒடிசா தாமராவுக்கு 240 கிமீ தென்-தென்கிழக்கே, மேற்கு வங்கம் சாகர் தீவுக்கு தெற்கே 310 கிமீ தொலைவில் உள்ளது என்றும், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் இந்த புயல் நகர்ந்து வருகிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"டானா" புயல் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புயல் கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசும் என்று கூறப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் இன்று இரவு முதல் நாளை காலை வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.