Tamilnadu

இர்பான் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் : மருத்துவமனைக்கு அபராதம்; 10 நாட்கள் தடை - பின்னணி?

Youtuber இர்ஃபான், பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று, அங்குள்ள உணவுகளை சுவைத்து வீடியோ மூலம் ரிவியூ சொல்வதின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இவர் அதை மட்டுமின்றி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு வந்தார். இதுவே அண்மைக்காலமாக அவருக்கு பெரிய சிக்கல்களை கொடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிநாட்டில் தனது மனைவி வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்துக் கொண்டு வீடியோவாக வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து மன்னிப்பு கேட்டதையடுத்து இந்த விவகாரம் விடப்பட்டது.

இருந்தாலும் சும்மா இல்லாமல், தற்போது தனது மனைவியின் பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, அதனை வீடியோவாக பதிவேற்றியிருந்தார். அதாவது இர்பான் - ஆசிஃபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குழந்தையை உலகுக்கு காட்டிய இர்பான், மறுநாள் சர்ப்ரைஸ் வீடியோ வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது மனைவி பிரசவத்துக்காக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதில் இருந்து முழு நாளையும் வீடியோவாக எடுத்திருந்தார். அப்போது குழந்தை பிறந்தபோது தாய்க்கும், குழந்தைக்கும் இடையே உள்ள தொப்புள்கொடியை அங்கிருந்த மருத்துவர்களுக்கு பதிலாக, பிரசவ அறையில் இருந்த இர்பானே தனது குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டினார். இதுகுறித்த வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், இர்பான் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்தது. இதைத்தொடர்ந்து இர்பான் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார். தற்போது இந்த விவகாரம் குறித்து ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், குழந்தையின் தொப்புள்கொடியை வெட்ட அனுமதித்த தனியார் மருத்துவமனையான ரெயின்போ மருத்துவமனை மீது முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 10 நாட்கள் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், மாறாக புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read: 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தானியங்கி மெட்ரோ! : அக்டோபர் 26ஆம் நாள் சோதனை ஓட்டம்!