Tamilnadu

சிறுகுறு தொழில்கள் இனி இருக்குமா? : பா.ஜ.க.வின் முதலாளித்துவ ஆட்சிக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்றிய பா.ஜ.க அரசிடம், சேனல் விலை ரூபாய் 19 என்பதை குறைத்து ரூபாய் 5ஆக மாற்றி அமைக்க வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்தரிதாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மோடி அரசு கார்ப்பரேட்டுகளை பலப்படுத்துவது வலப்படுத்துவது போன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவது தான் பாஜகவின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இதனால், சிறுகுறு தொழில் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனைத்தையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் நிலைமையை தான் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்து கொண்டிருக்கிறது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஜியோ கேபிள் இணைத்துக் கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்துப் போராடினால் தான் நம்மைப் போன்று சிறுகுறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை பாஜக அரசின் வங்கிகள் வாரி வழங்குகிறது.

ஆனால் நாம் வங்கிகளில் கடன் கேட்டால் நம்முடைய அத்தனை சொத்து தொடர்பான விவரங்களையும் வாங்கிவிட்டு தான் கொடுக்கிறார்கள். பல்லாயிரம் கோடிகளை கடன் வாங்கிச் சென்ற வைர வியாபாரியை இன்னும் கைது செய்யவில்லை. எனினும் வங்கிகள் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனை வாங்கி வாங்கி கொடுக்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 24 லட்சம் கோடி வாராக்கடனக் தள்ளுபடி செய்துள்ளார்கள், அது அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத் தான்.

ஆனால் நம்மைப் போன்றவர்கள் இந்தியன் வங்கி ஸ்டேட் வங்கியில் வாங்கிய கடனில் இதுவரை ஒரு ரூபாயை தள்ளுபடி செய்திருப்பார்களா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ஒன்றிய நிதி அமைச்சர் 30 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக குறைத்து உள்ளார்கள். ஆனால் நம்மிடம் மட்டும் 18 விழுக்காடு வரி வாங்குகிறார்கள்.

ஒரு கண்ணில் வெண்ணெய்! மறு கண்ணில் சுண்ணாம்பு! வைக்கும் வேலையைத்தான் ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது” என்றார்.

Also Read: சென்னையில் மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் பழனிசாமி - முதலமைச்சர் விமர்சனம் !