Tamilnadu

ரூ.13 கோடி லாபத்தில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்... அமைச்சர் ஆர்.காந்தி பெருமிதம் !

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த ஆட்சி காலத்தில் ஒன்பதரை கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில், தற்பொழுது வரை ரூ.13 கோடி லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு லாபத்தை அதிகரித்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது, “கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த ஆட்சி காலத்தில் ஒன்பதரை கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு முதல் ஆண்டிலேயே ஒன்பதரை கோடி ரூபாய் லாபத்தை ஈட்டி வந்தோம். தொடர்ந்து தற்பொழுது வரை ரூ.13 கோடி லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு லாபத்தை அதிகரித்து செயல்பட்டு வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் கடைகள் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் உள்ளன. வெளிமாநிலங்களில் 44 கடைகள் உள்ளன. இவைகளில் 48 கடைகள் நவீனமயமாக்கப்பட்டு விற்பனை இரட்டிப்பு அடைந்துள்ளது. ரூ.171 கோடி விற்பனையில் இருந்து வந்தவை தற்போது ரூ.200 கோடிகளுக்கு மேல் விற்பனையாகி வருகிறது. 400 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.

கடந்தாண்டு தீபாவளிக்கு ரூ.73 கோடி விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பட்டு சேலைகளுக்கு உத்தரவாத அட்டைகள் வழங்கப்படுகிறது. சேலையில் உள்ள தங்கம், வெள்ளி சரிகைகளுக்கு இந்த உத்தரவாத அட்டைகள் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பாக குறைவான டிசைன் சேலைகள் இருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் 1000க்கும் அதிகமான டிசைன் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் விரும்பும் டிசைன் சேலைகளை உடனுக்குடன் தயாரித்து வழங்கும் நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த அளவிற்கு பொதுமக்கள் விரும்பும் வகையில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் நவீன மயமாக்கப்பட்டு சிறந்த முறையில் விற்பனையை செய்து வருகிறது.

எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமல் நவீன காலத்திற்கேற்ப மக்களின் தேவை அறிந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் துணிகளை விற்பனை செய்து வருகிறது. புகார்கள் உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்படுகிறது. இவைகள் உண்மைக்கு மாறானவை.” என்றார்.

Also Read: இர்பான் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் : மருத்துவமனைக்கு அபராதம்; 10 நாட்கள் தடை - பின்னணி?