Tamilnadu

நீலக்கொடி சான்றிதழுக்கு தயாராகும் சென்னை மெரினா : டெண்டர் வெளியிட்டது சென்னை மாநகராட்சி !

டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பட்டியலில் சென்னை மெரினா கடற்கரையும் இணையவுள்ளது.

மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டத்திற்கான கட்டுமானங்களை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளதால் இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் பாரம்பரியம் சாா்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்தபின்னர் சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மூடப்பார்த்ததுதான் பாஜக அரசு - அம்பலப்படுத்திய முரசொலி !