Tamilnadu

13 வீரர்களுக்கு ரூ.1 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி !

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலமாக விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு அதிநவீன பந்தய சைக்கிள்கள், போட்டிகளில் கலந்து கொள்ளும் செலவினத்திற்கான தொகை என 13 விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு மொத்தம் 1,00,36,312 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (22.10.2024) தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை மூலமாக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அதிநவீன பந்தய சைக்கிள்கள், போட்டிகளில் கலந்து கொள்ளும் செலவினத்திற்கான தொகை என 13 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 1,00,36,312 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினை உலகில் உள்ள முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் வகையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். விளையாட்டுத்துறை நாடுகளுக்கிடையே நட்புறவு உண்டாக்கும் மிகச்சிறந்த ஒரு துறையாக திகழ்கின்றது. உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எந்த நாட்டை சார்ந்தவராக இருந்தாலும் நாடுகள் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

அத்தகைய சிறப்புகள் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் கிடைக்க வேண்டும், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சிறந்த நிலையை அடைய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதன் மூலமாக விலையுயர்ந்த விளையாட்டு உபரகணங்கள், வெளிநாடுகளில் நடைபெறும் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள செலவினத்தொகை மற்றும் பயிற்சி பெற ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 3 வருடங்களில் மட்டும், 3 ஆயிரத்து 350 விளையாட்டு வீரர்களுக்கு, 110 கோடி ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கையால், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு, அரசுப்பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயனடைய விரும்பும் வீரர்கள், https://tnchampions.sdat.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளை மூலமாக கடந்த 2 ஆண்டுகளில், 680 வீரர்களுக்கு 12 கோடி அளவில் நிதி உதவி மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான விலை உயர்ந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு வீரர்கள் பதக்கம் வென்று வந்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 5 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்.

அந்த வகையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், வருகிற 10.10.2024 முதல் 21.10.2024 வரை ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள செல்வி. அ. சர்வாணிகா அவர்களுக்கு விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத் தொகை ரூ.5,29,182/-க்கான காசோலையை வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்கள் தாய்லாந்தின் சோங்க்லாவில் 1.12.2024 முதல் 7.12.2024 வரை நடைபெறவுள்ள உலக திறன் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ள 7 தடகள பாரா விளையாட்டு வீரர்களுக்கு விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்காக ரூ.11,73,900/-க்கான காசோலைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் 5 சைக்கிள் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு “TN Champions Foundation" அறக்கட்டளை மூலமாக தலா 16,66,646 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.83,33,230/-மதிப்பிலான அதிநவீன பந்தய சைக்கிள்களை வழங்கினார். இன்று (22.10.2024) மட்டும் 13 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 1,00,36,312 ரூபாய்க்கான விளையாட்டு மேம்பாட்டு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆப., சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: மகப்பேறு இறப்புகளை தடுக்க சுகாதாரத்துறையில் War Room : கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?