Tamilnadu

ஆளுநருக்கு சவால்விட்ட முதல் பத்திரிகையாளர் முரசொலி செல்வம்! : ‘தி இந்து’ என்.ராம் புகழுரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை எழுத்து ஊடகத்தில் முன்மொழிந்து வரும் முரசொலியை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்த, முரசொலி செல்வம் மறைவை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ‘தி இந்து’ என்.ராம், “எந்த ஒரு அரசியல் பதவிக்கும், கழகப் பதவிக்கும் ஆசை கொள்ளாதவர் முரசொலி செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பத்திரிகையாளராக எந்தவித சமரசம் இல்லாமல் தனது பணியை நேர்பட செய்தவர்.

2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில், இந்து நாளிதழில் ஒரு தலையகம் வெளியிடப்பட்டது. அப்பொழுது அந்த தலையகத்தை முரசொலி செல்வம் அவர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து முரசொலியில் பதிவிட்டார். அதன் காரணமாக எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை, அவருக்கும் கிடைத்தது. எனினும், அவர் சமரசம் செய்யவில்லை.

‘கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி’ என பத்திரிகை துறையில் முதன் முதலில் ஆளுநருக்கு சவால் விட்டவர் முரசொலி செல்வம் அவர்கள்தான். எந்த காலகட்டத்திலும் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இரு மொழிக் கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள், மும்மொழிக் கல்வி கொள்கையை என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

காவல்துறையில் பணியாற்றி, ஆளுநராக பதவியேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலில் ஈடுபட்டு விடலாம் என எதிர்பார்த்ததை வலுவாக சுட்டி காட்டினார். இன்றைக்கு மோடி அரசாங்கம் அல்லது பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தை மதிக்காமல், பத்திரிகையாளர்களை கூண்டில் நிறுத்தியும், சிறையில் அடைத்து அவர்களை சித்திரவதை செய்து மிரட்டி வருகிறார்கள்.

இது போன்ற சூழலில், அப்போதே சட்டப்பேரவை கூண்டில் ஏறி, தற்போதைய பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக முரசொலி செல்வம் இருந்ததை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது.

திராவிட இயக்கம் என்பது உண்மையானது ஆளுநர் ஆர்.என். ரவி கூறுவது போல அல்ல. தமிழகம் என்பது தமிழ்நாட்டின் பெயர் அல்ல அதேபோல் தமிழ்த்தாய் வாழ்க்கையில் திராவிட எழுத்தை எப்பொழுதும் எடுக்க முடியாது எனபதனை முதலமைச்சரோடு இணைந்து தெளிவாக சுட்டிக்காட்டியவர்” எனப் புகழுரைத்தார்.

Also Read: நட்பின் இலக்கணம் - என் ஆசிரியர் முரசொலி செல்வம் : அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!