Tamilnadu

‘ஈசா மையம்’ ஏன் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும்? : கோவை மாவட்ட கண்காணிப்பாளர் விளக்கம்!

கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈசா யோகா மையத்தில் தங்கி உள்ள தனது இரு மகள்களை மீட்டுத் தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணையில், ஈசா மீதான வழக்குகள், வழக்குகளின் விவரம், மகள்கள் கட்டாயத்தின் பேரில் யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என காமராஜ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி 4 ஆம் நாளுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதை அடுத்து, ஈசா யோகா மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல குழுவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஈசா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஈசா மையத்தில் பணியாற்றும் மருத்துவர் மீதான போஸ்கோ வழக்குக்கு தடைவிதிக்க முடியாது. அந்த மருத்துவரால் 12 பள்ளி மாணவிகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்” என குறிப்பிட்டனர்.

மேலும், ஈசா மையத்தின் மீது எழுந்த பாலியல் உள்ளிட்ட இதர புகார்களின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், ‘ஈசா மையம்’ ஏன் கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும்? என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சமர்பித்த பதில் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் முக்கியான குறிப்புகளாக, “ஈசா மையத்திற்கு சென்ற 6 பேர் காணவில்லை என FIR!

மர்ம முறையில் மரணம் நிகழ்ந்ததாக 7 FIR!

ஈசா மையத்திற்குள் சட்டவிரோதமாக ஒரு சுடுகாடு இருக்கிறது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஈசாவில் பணிபுரியும் மருத்துவர் மீது 12 பழங்குடி பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக POCSO வழக்கு.

ஈசா மையத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து டெல்லி பெண், டெல்லி காவல்நிலையத்தில் புகார்.

பழங்குடி மக்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு.

யானை வழிதடத்தில் அனுமதியின்றி ஈசா மையத்தின் கட்டடங்கள்.

மனப்பிறழ்வு(mood swings) பாதிப்படைந்தவர்கள் பலர் ஈசா மையத்தில் இருக்கின்றனர்.

8000 பேர் வசிக்கும் ஈசா மையத்தில், விசாரிக்க அதிகப்படியான காவலர்கள் தேவை” உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தீப ஒளி திருநாளுக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்!