Tamilnadu

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி! - 3 ஆண்டுகளில் ரூ. 110 கோடி ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி!

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 710 ஊராட்சி மன்றங்களுக்கு 1,110 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்; 202 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2,600 சகோதரிகளுக்கு, ரூ. 23 கோடி அளவில் வங்கிக்கடன் இணைப்பு வழங்கல்; 300 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கல்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை சார்பில் வீடுகள் ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள், இன்று சேலத்தில் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்டு உரையாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு, தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களும், வளர்ச்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நிலவும் பட்டா சிக்கல்களை தீர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு 36,000 பட்டாக்கள் தயார் செய்யப்பட்டு, படிப்படியாக வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக சேலத்திலும் தற்போது வழங்குகிறோம்.

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத்தொகை வழங்கிட விரைவில் வழிசெய்யப்படும்.

மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையை ரூ. 1000 இலிருந்து, ரூ. 1,500ஆக உயர்த்திக்கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாற்றுத்திறனாளிகளை தாய் உள்ளத்தோடு நடத்தக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

மேலும், விளையாட்டுத்துறையில், மாரியப்பன், துளசிமதி போன்று, பல நூறு சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிட தான், ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறோம்.

2024ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை தொடருக்காக, ரூ. 83 கோடி ஒதுக்கீடு செய்து, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்துகொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட, சுமார் 2 மடங்கு அதிகரித்து 11 லட்சமாக இருக்கிறது. இது தான், முதலமைச்சர் கோப்பையின் வெற்றி.

குறிப்பாக, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல், கடந்த 3 ஆண்டுகளில் 3,350 வீரர்களுக்கு ரூ. 110 கோடிக்கும் மேலாக உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Also Read: கவரப்பேட்டை ரயில் விபத்து - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!