Tamilnadu
“ஆளுநருக்கு இது வாடிக்கையாகிவிட்டது; திமுக இல்லையென்றால்...” : திருச்சி சிவா MP ஆவேச பேச்சு!
சென்னை ஓட்டேரி பாஷ்யம் தெரு பகுதியில், சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதியின் சார்பில் பவள விழா ஆண்டு மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு அஞ்சாமல் நடப்போம் !! அறியாமையை துடைப்போம் !! என்கின்ற தலைப்பில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கழகத் துணை அமைப்புச் செயலாளர் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மாநிலங்களவை கழக குழு தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி பேசியதாவது, “கடந்த ஆட்சியின்போது பருவமழையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தது. பருவகால மழையில் மக்கள் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மிகவும் சிறப்பாக செயலாற்றினார்கள்.
புயலோ, வெயிலோ, மழையோ ஏதுவாக இருந்தாலும் கழகத்தின் பணி என்றும் முடங்காது. அஞ்சாமல் நடப்போம், அறியாமையை துடைப்போம் இதுதான் நமது கழகம். தமிழ்நாட்டில் ஒற்றைக் குரல் எதிர்ப்பு தெரிவிக்க தூர்தர்ஷன் தொலைக்காட்சியை மன்னிப்பு கேட்கும் நிலைமைக்கு இப்பொழுது உள்ளார்கள் இதுதான் திராவிட கழகத்தின் எழுச்சியும் பெருமையும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் உணவுகளை புரிந்து கொள்ளாமல் இன்னுமும் நடந்து கொள்கிறார். குறிப்பாக ஆளுநர் செய்வதை எல்லாம் செய்து விடுகிறார் பின்னர் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கண்டன உரையை அளித்தவுடன் ஆளுநர் படர் என்று கீழே விழுந்து விடுகிறார் இதை மட்டுமே வாடிக்கையாக ஆளுநர் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் எழுதி கொடுக்கப்படுகிற உரையை மட்டும் தான் ஆளுநர் படிக்க வேண்டும் மாறாக அதனை திருத்தம் செய்ய எந்த ஒரு அதிகாரமும் அவருக்கு கிடையாது. குறிப்பாக நேற்று ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திராவிடம் என்கின்ற வார்த்தையை நீக்கி தமிழ்தாய் வாழ்த்து பாட்டினை பாடி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்று. பொறுப்புக்கு வந்த பின்னர் ஒரு கடமைகள் உண்டு.
அரசியல் சாசனம் பாதுகாப்பு அளித்து வரக்கூடிய வேளையில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. வேறு ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இங்கு நடப்பதோ பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி. அதன் காரணமாக தான் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட உரைக்கு பதிலாக ஆளுநர் அவர் விருப்ப உரையை வாசித்தபோது நமது முதல்வர் ஆளுநரின் உரையை நீக்கியதாக அறிவிப்பை வெளியிட்டார்.
மக்களவையில் உரையாற்றும் பொழுது பலர் இந்தியை தேசிய மொழி என்று உரைப்பார்கள் நாங்கள் அதனை திருத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் அனைத்து மொழிகளும் தேசிய மொழி தகுதி உடையது தான் என உரை நிகழ்த்துவோம். அவரவர் மொழியை திணிக்கமால் இருந்திருந்தால் இந்தி ஆட்சி மொழியாக இருந்திருக்காது.
இந்த நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இந்தியாவின் ஆட்சி மொழி ஆங்கிலமாக மட்டுமே இருந்தது. ஒரு நாடு குடியரசாக இருக்க வேண்டும் என்றால் அவற்றிற்கு அரசியல் சட்டம் இருக்க வேண்டும். அந்த அரசியல் சட்டம் ஒரு நாட்டின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக மட்டுமே இருக்க வேண்டும். குடியரசு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் இந்த மூன்றில் பெரியது என்றால் இந்த மூன்றும் இல்லை அரசியல் சாசன சட்டம் மட்டுமே என்றுமே பெரியது.
பழைய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மைய மண்டபத்தில் தான் அரசியல் சாசன சட்ட திருத்தம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் விவாதம் நடைபெற்றது. இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தி ஒற்றை வாக்கில் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக போன்ற கட்சிகள் இல்லாமல் இருந்திருந்தாலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழர் கலைஞர் ஆகியோர் இல்லாமல் இருந்து இருந்தால் இந்தி நிரந்தர ஆட்சி மொழியாக இன்று இருந்து இருக்கும். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது.
இந்தி மொழியை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறீர்கள் வெறும் 60 நாட்கள் பயின்றால் இந்தியை படித்து விடலாம் என்று வாஜ்பாய் கூறிய பொழுது பேரறிஞர் அண்ணா அதற்கு இந்தியில் அதுக்கு மேல் படிக்க என்ன உள்ளது என்று கேட்டார். மத்திய ஒன்றிய அரசு நிறைவேற்றப்படுகின்ற அனைத்து திட்டங்களும் இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயர்களை வைத்து நிறைவேற்றி வருகிறார்கள். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் நட்பு பாராட்ட முடியாது ஏனெனில் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு மொழிகள் தெரியாது அதுதான் காரணம்.
எனக்கு தெரியாத மொழி எதுவாக இருந்தாலும் அது அந்நிய மொழிதான். அதன் காரணமாக தான் இந்தி மொழியையும் சமஸ்கிருத மொழியையும் அன்னிய மொழி என்று நான் இன்று வரை குறிப்பிட்டு வருகின்றேன். சந்திராயன் 3 வது விண்கலம் மூலம் இந்தியா முதல் இடத்திற்கு வந்தது. அதுமிகவும் பெருமை படப்பட வேண்டிய ஒன்று. ஆண்டவனை தொடுவதற்கு உரிமை கெட்ட நாட்டில் ஆண்டவனை தொட உரிமை வழங்கிய முதலமைச்சர் உள்ள நாடு நமது தமிழ்நாடு.
சந்திராயன் விண்கலத்திற்கு இவ்வளவு பெருமை ஏன் என்றால் சந்திராயன் நிலவின் தென் பகுதிக்குச் சென்று அங்கு நீர் நிலைகள் இருப்பதை கண்டுபிடித்த முதல் விண்கலம் அதுதான். அந்த விண்கலத்தை கண்டுபிடித்தவர் தான் மயில்சாமி அண்ணாதுரை. அதேபோல் சூரியனின் இயக்கத்தை ஆராய்வதற்கு ஆதித்யா என்கின்ற ஒரு விண்கலம் செல்கிறது அந்த விண்கலம் வடிவமைத்தவர் செங்கோட்டையில் உள்ள இஸ்லாமிய பெண் சாஜி என்பவர் தான்.
இஸ்ரோவின் ஆராய்ச்சி என்பது அடுத்த கட்டமாக நிலாவில் மனிதன் இறங்கியதைப் போல நமது நாட்டை சார்ந்தவர்களும் இறங்குவார்கள். இஸ்ரோ மூலமாக 3 விண்கலங்கள் வடிவமைத்த நான்கு பேரும் சமஸ்கிருதம் இந்தி தோன்றிய மொழிகளை கற்று கொள்ளாதவர்கள் என உரை நிகழ்த்தினேன். தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. இந்தி மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது தேவன் நாகரி என்ற எழுத்தின் இரவல் மொழிதான் இந்தி.
பேரறிஞர் அண்ணா செய்த அரும்பெரும் காரியங்கள் மூன்று. அதில் மிகவும் முக்கியமான ஒன்று இரு மொழி கல்வி கொள்கையே ஆகும். ஆட்சி மொழி தொடர்பாக இன்று பிறப்பிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மாநில மன்றம் நிராகரிக்கிறது என சொன்னவர் பேரறிஞர் அண்ணா. 75 ஆண்டு காலம் ஒரு இயக்கம் இருப்பது என்பது மிகவும் பெருமையாக உள்ள ஒன்று. மொழிக்கு ஒரு பிரச்சனை என்றால் எதை இழந்தாலும் மொழியை காப்போம் என்கின்ற அமைச்சர்கள் பேசக்கூடிய ஒரு ஆட்சியைக் கொண்டது இந்த மண். நாங்கள் யாரும் எங்களது பொறுப்பை மறந்தும் எங்களது உணர்வை மறந்தும் ஒருபோதும் பேசியதில்லை ஏனெனில் இது திராவிட முன்னேற கழகத்தின் மேடை.
நாங்கள் யார் வம்புக்கும் பேசவில்லை, வீம்புக்கும் பேசவில்லை நாங்கள் எங்கள் பாதுகாப்புக்காக மட்டுமே பேசுகிறோம். மொழியையும் கலாச்சாரத்தையும் காக்க கூடிய ஒரு போர்க்களமாக தமிழ்நாடு இருந்தால் தமிழ்நாட்டை காக்க கூடிய கேடயம் போல் திராவிட முன்னேற்ற கழகம் என்றும் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!