Tamilnadu

“திராவிட மாடல் அரசு அனைவருக்கும் துணை நிற்கும்”: அரசின் சாதனைகளை பட்டியலிட்ட துணை முதலமைச்சர்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (19.10.2024) திருவண்ணாமலை மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 860 ஊராட்சி மன்றங்களுக்கும்,  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 412 ஊராட்சி மன்றங்களுக்கும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 208 ஊராட்சி மன்றங்களுக்கும், 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். மேலும் 803 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 78.05 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடனுதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசுகையில் தெரிவித்ததாவது,  "திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றங்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்களை வழங்குவது மற்றும் 803 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு ரூபாய் 78 கோடிக்கான வங்கிக்கடன் வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். பெருமையடைகின்றேன். 

இந்த நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு முன்பு 16-ஆம் தேதியே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. உங்களுக்குத் தெரியும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணத்தால் 3 நாட்கள் தள்ளி இன்று சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த கனமைழையின்போது நம்முடைய அரசு மக்களோடு மக்களாக நின்றது. மக்களும் நம்முடைய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்.  

சென்னையில் பெய்த மழையை, மழையே பெய்யவில்லை, 10 செ.மீட்டர் கூட பெய்யவில்லை என்று சிலர் சொல்லுகின்றார்கள். ஆனால் வடசென்னை மாவட்டத்துல 30 செ.மீட்டர் வரை, 25 செ.மீட்டர் வரை மழை பெய்தது. மழை பெய்த ஒரே நாளில், இரண்டாவது நாளில் அந்த சுவடே இல்லாமல் மாறியிருக்கின்றது என்றால் அதுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆகும். 

நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், பல்வேறு கட்டமாக, கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக ஆய்வுகள் நடத்தி இன்றைக்கு சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழையில் இருந்து மக்களை காப்பாற்றியிருப்பதற்கு முழு காரணம், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் நம்முடைய திராவிட மாடல் அரசும் தான். அதற்கு என்னோடு, தோள் நின்று எனக்கு துணை நின்று, ஒரு வழிகாட்டியாக எனக்கு அட்வைஸ் செய்தவர் உங்களுடைய மாவட்ட அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு தான். அதற்காக இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருமழையை வென்ற மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் தான், உங்களைக் காண வந்திருக்கின்றேன். அடுத்து வருகின்ற மழை நாட்களிலும், மக்களை காக்கின்ற பணி தொடரும் என்பதையும் இந்த மகிழ்ச்சி மூலம் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

   கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் தொடங்கி வைத்தோம். இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளுக்கு, ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறோம். இதுவரை தமிழ்நாடு முழுக்க 23 மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கி இருக்கிறோம். 

    அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சி 3 மாவட்டங்களுக்கும் சேர்த்து திருவண்ணாமலை மாவட்டத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்காக விளையாடி, பெருமை சேர்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கூட, விளையாட்டு வீர்ர்களை மேடையில் அமர வைத்திருக்கின்றோம். பெருமைப்படுத்தியிருக்கின்றோம்.  

திருவண்ணாமலை  மாவட்டத்தைச் சேர்ந்த, தடகள வீராங்கனை தங்கை பவித்ரா இங்கே வருகை தந்திருக்கிறார். எஸ்.டி.ஏ.டி விடுதி மாணவியான தங்கை பவித்ரா, கிராண்ட் பிரி நேசனல் -2022, ஓப்பன் நேசனல் சாம்பியன்ஷிப் 2023, ஓப்பன் நேசனல் கார்னிவல், ஜூனியர் நேசனல் அத்தலெட்டிக் சாம்பியன்ஷிப் 2023, சவுத் ஜோன் ஜூனியர் நேசனல் அத்தலெட்டிக் சாம்பியன்ஷிப் 2023 போன்ற பல்வேறு போட்டிகளில் வென்று 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கின்றார்.  தொடர்ந்து சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தன்னுடைய திறமையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய வெற்றிப்பயணம் தொடரட்டும்.

  அதே போல, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த டிரிபிள் ஜம்ப் வீரர் தம்பி யுவராஜ் அவர்களும் இங்கே வருகை தந்திருக்கிறார். நேசனல் யூத் அத்தடெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2023, சவுத் ஜோன் ஜூனியர் நேசனல் அத்தலெட்டிக் சாம்பியன்ஷிப், தமிழ்நாடு இன்டர் டிஸ்டிரிக்ட் ஜூனியர் அத்தலெட்டிக் சாம்பியன்ஷிப் ஆகியப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 -ல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். 

  தொடர்ந்து, தேசிய அளவிலானப் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் தம்பி யுவராஜ் தமிழ்நாட்டின் முக்கியமான தடகள வீரராக உருவாகி வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பெருமையடைகின்றோம். தங்கை பவித்ரா, தம்பி யுவராஜ் இருவரும், விளையாட்டுத்துறையில், சாதிக்கத் துடிக்கும் பலருக்கும்முன் மாதிரியாகவும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் பல்வேறு சதனைகளை படைத்து வருகின்றார்கள். அவர்கள் இருவருக்கும் நாம் அனைவரும் சேர்ந்து கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம். உங்களுடைய சாதனைகள் தொடர வேண்டும். 

தங்கை பவித்ராவைப் போல, யுவராஜைப் போல இன்னும், பல நூறு விளையாட்டு வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை வருடம் தோறும் நடத்தி வருகிறோம். நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் நடத்தப்படுகின்ற இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் விளையாட்டினை ஒரு மாபெரும் இயக்கமாகவே மாற்றி வருகின்றது.

சென்ற ஆண்டு கிட்டத்தட்ட 5 இலட்சம் பேர் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு மொத்தம் 11 இலட்சம் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கென நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் 86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்ற முறையை விட இந்த முறை 5 விளையாட்டுகள் கூடுதலாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

  இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கான பரிசுத் தொகை மட்டும் நம்முடைய முதலமைச்சர் 37 கோடி ரூபாயாக இந்த முறை உயர்த்தித் தந்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே ஒரு மாநிலம் நடத்துகின்ற விளையாட்டுப் போட்டியை இந்த அளவிற்கு அதிகமான பரிசுத் தொகையை வழங்கப்படுகிறது என்றால், அது தமிழ்நாடு மாநிலம் மட்டும்தான்.

குறிப்பாக, இந்த மூன்று வருடங்களில் மட்டும், கிட்டத்தட்ட 1,300 விளையாட்டு வீரர்களுக்கு, 38 கோடி ரூபாய்க்கும் மேலாக உயரிய ஊக்கத்தொகையை (High class incentives) நம்முடைய முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்கள். 

  அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது, விளையாட்டு வீரர்களின் பல வருடக் கோரிக்கை.

  முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளின் பேரில், முதற்கட்டமாக சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கின்றோம்.

  அதேபோல, சமீபத்தில் பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து 6 வீரர்களை அனுப்பி வைத்தோம். விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே நம்முடைய முதலமைச்சர், அவர்கள் பயிற்சி எடுப்பதற்காக மட்டுமே ஊக்கத் தொகையாக ஏழு இலட்சம் ரூபாயை வழங்கி அனுப்பினார்கள். 

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 6 பேரில் 4 பேர் 1 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்களோடு வென்று வந்தார்கள். அவர்களுக்கு 5 கோடி ரூபாய் அளவிற்கு நம்முடைய முதலமைச்சர் ஊக்கத் தொகையாக வழங்கினார்கள்.

  ஏழை, எளிய, மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு நம்முடைய தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதியுதவிப் பெற விரும்புகின்ற விளையாட்டு வீரர்கள், யாராக இருந்தாலும் TNCF என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமாக, கடந்த இரண்டு வருடங்களில் 513 வீரர், வீராங்கனைகளுக்கு ரூபாய் 10 கோடி அளவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளோம். 

விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசின் பல்வேறு துறைகளும் இன்றைக்கு மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்றன.

  வறுமை ஒழிப்பு – சுகாதாரம் – கல்வி – வேலைவாய்ப்பு – மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு இன்றைக்கு முதலிடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மகளிரின் வாழ்க்கைத் தரம் உயர உங்களுடைய பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்திட நம்முடைய ஆட்சி அமைந்து மாண்புமிகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தைத்தான் செயல்படுத்தினார்கள். இந்தத் திட்டத்தினால், இந்த மூன்று வருடங்களில் மட்டும் இதுவரைக்கும் 530 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். 

இதுபோல், பள்ளிக்குச் செல்கின்ற பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுப்பதற்கு சிரமப்படக்கூடாது என்று காலை உணவுத் திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். இன்றைக்கு இந்தத் திட்டத்தின் மூலமாக, திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 20 இலட்சம் குழந்தைகள் இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலமாக பயன்பெற்று வருகின்றார்கள். 

  அதேபோல அரசுப் பள்ளியில் படித்த பெண்கள் உயர் கல்வி படிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு புதுமைப் பெண் என்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்தார்கள். இந்தப் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வருடந்தோறும் மூன்று இலட்சம் மாணவிகள் மாதம் தோறும் 1000 ரூபாய் பயன்பெற்று வருகிறார்கள்.

இப்போது அந்தத் திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியில் படிக்கக்கூடிய மூன்று இலட்சத்து ஐம்பாதாயிரம் மாணவர்கள் மாதம் தோறும் 1000 ரூபாய் பயன்பெற்று வருகிறார்கள். 

    அதேபோல இந்தியாவிலேயே அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். அதிகளவில் வேலைவாய்ப்பை தரக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு பெண்கள் 43 சதவீதம் பேர் பணிக்குச் செல்வதன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தில் வேலைக்குச் செல்கின்ற மகளிர் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம். இதன் மூலம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 9 மாதமும் 1 கோடியே 16 இலட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

 பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “Unfair for the PM to make comments without knowing what Minister Udhayanidhi spoke” : CM MK Stalin Said!