Tamilnadu

திராவிட மாடல் ஆட்சியில் தகைசால் தலைவர்களுக்கு நினைவரங்கங்கள், சிலைகள்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், சமூகநீதி வேங்கைகள் தமிழ்ச் சான்றோர்கள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்திட இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாட்டில் நினைவரங்கங்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய பணிகளில் சிறந்த பணி பல்லாயிரக் கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, சூழும் தென்கடல் ஆடும் குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரம், 7000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை 9 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவி புத்தாயிரம் தொடங்கிய 2000, ஜனவரி-1 அன்று திறந்துவைத்த திருப்பணியாகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர்சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி தியாகிகளைப் போற்றியுள்ளார்கள். அவர்கள் வழியில், திராவிட மாடல் ஆட்சியைப் பார்முழுதும் பாராட்டும் வண்ணம் நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய இந்திய நாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள். அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட ஆரூயிர்கள் தந்து போராடிய அற்புதத் தியாகிகள் அனைவரையும் போற்றிப் பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்படங்களையும் தமிழ்நாட்டில் ஏராளமாக எழுப்பி வருகிறார்கள்.

இவை அனைத்தும் வருங்கால இளைஞர்களுக்கு நல்வழிகாட்டி உணர்வூட்டிடும் உயிரோவியங்களாகும். அவற்றுள் சில. . .

உத்தமர் காந்தியடிகள் திருவுருவச் சிலை

எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 15.8.2022 அன்று உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலை.

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 28.5.2022 அன்று ரூபாய் ஒரு கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை.

பேராசிரியர் க.அன்பழகனார் சிலை

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 10.8.2023 அன்று பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருவுருவச் சிலை.

நாவலர் சிலை

நடமாடும் பல்கலைக் கழகம் எனப் போற்றப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு 26.12.2021 சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், மார்பளவு வெண்கலச் சிலை.

அண்ணல் அம்பேத்கர் சிலை

சென்னை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் 27.10.2022 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை.

கி.ராஜநாராயணன் நினைவரங்கம்

​கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.என்னும் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் 2.12.2022 அன்று ஒரு கோடியே 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் நினைவரங்கம்.

வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம்

உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவில்லமாக்கப்பட்டு, அங்கு ரூபாய் 18 இலட்சம் மதிப்பீட்டில் 11.12.2022 அன்று பாரதியாரின் மார்பளவுச் சிலை.

அல்லாள இளைய நாயகர் சிலை

நாமக்கல் ஜேடர்பாளையத்தில் ரூபாய் 26 இலட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில், அல்லாள இளைய நாயகர் அவர்களுக்கு, 28.1.2023 அன்று குவிமாடத்துடன் (Dome) திருவுருவச் சிலை.

பெருங்காம நல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம்

பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சார்ந்த 16 தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில் 14.2.2023 அன்று 1 கோடியே 47 இலட்சம் செலவில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம்.

கிண்டி காந்திமண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட சிலைகள்

வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள், வ.உ.சி,. ஆகியோருக்கு 14.2.2023 அன்று சிலைகள்.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைகள்

​கோவை வ.உ.சி. பூங்காவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு ரூபாய் 40 இலட்சம் செலவிலும், மயிலாடுதுறையில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு 10.5.2023 அன்று ரூபாய் 15 இலட்சத்து 97 ஆயிரத்து 669 செலவிலும் புதுக்கோட்டையில் சமூகச் சீர்திருத்த வேங்கை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு 10.5.2023 அன்று 9 இலட்சத்து 84 ஆயிரத்து 650 ரூபாய்ச் செலவிலும் திருவுருவச் சிலைகள்.

டி.எம்.சௌந்தரராஜன் சிலை

திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு 16.8.2023 அன்று 46 இலட்சத்து 68,453 ரூபாய் செலவில் மதுரையில் திருவுருவச் சிலை

ப.சுப்பராயன் சிலை

டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு 5.9.2023 அன்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை.

இரவீந்தரநாத் தாகூர் சிலை

சென்னை இராணி மேரி கல்லூரி வளாகத்தில் 29 இலட்சத்து 61,694 ரூபாய் மதிப்பீட்டில் 8.9.2023 அன்று வங்கக் கவி இரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு திருவுருவச் சிலை.

அப்துல்கலாம் சிலை

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 21 இலட்சத்து 95,799 ரூபாய் மதிப்பீட்டில் 15.10.2023 அன்று இந்தியக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலை.

அஞ்சலை அம்மாள் சிலை

கடலூர் மாநகராட்சி முதுநகர் காந்தி பூங்காவில் 2.11.2023 அன்று 25 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு திருவுருவச் சிலை

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்

தூத்துக்குடி மாநகரில் ரூபாய் 100 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மக்களுக்குக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்த நகராட்சி தலைவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு 15.11.2023 அன்று 77 இலட்சத்து 87,343 மதிப்பீட்டில் குவி மாடத்துடன் கூடிய சிலை.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் சிலை

சமூகநீதிக் காவலர் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் 27.11.2023 அன்று 52 இலட்சத்து 20,000 ரூபாய்ச் செலவில் திருவுருவச்சிலை.

அயோத்திதாசப் பண்டிதர் சிலையுடன் மணிமண்டபம்

​சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திராவிடப் போரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு 1.12.2023 அன்று 2 கோடியே 48 இலட்சத்து 75,859 ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்.

வீரமாமுனிவர் சிலையுடன் மணிமண்டபம்

தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டியில், "தமிழகராதியின் தந்தை" எனப் புகழ் படைத்த வீரமாமுனிவருக்கு , 22.1.2024 அன்று 1 கோடி மதிப்பீட்டில் சிலையுடன் மணிமண்டபம்.

நாமக்கல் கவிஞர் சிலை

நாமக்கல் நகரில் நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு, அவரது நினைவில்லத்தில் 22.1.2024 அன்று 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மார்பளவுச் சிலை

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்

பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் 26.2.2024 அன்று “கலைஞர் உலகம்” எனும் அருங்காட்சியகத்துடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம்

பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்கள்

27.2.2024 அன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு 1 கோடியே 48 இலட்சத்து 22,829 ரூபாய் மதிப்பீட்டிலும், நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு 77 இலட்சத்து 62,004 ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்க் கலை உலகில் ஏழிசை மன்னர் எனப் புகழப்பட்ட எம்.கே.தியாகராஜபாகவதர் அவர்களுக்கு 79 இலட்சத்து 39 ஆயிரத்து 122 ரூபாய் மதிப்பீட்டிலும் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள்

இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் தங்கோ - டாக்டர் மு.வ. வீரன் சுந்தரலிங்கம் சிலைகள் 27.2.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் 2 கோடியே 17 இலட்சத்து 74 ஆயிரத்து 909 ரூபாய் மதிப்பீட்டில் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையையும், இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டையில் தமிழறிஞர் டாக்டர்.மு.வரதராசனார் அவர்களுக்கு 65 இலட்சத்து 76,562 ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையையும், தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மார்பளவுச் சிலையை மாற்றி, 48 இலட்சத்து 66 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பீட்டில் வீரன் சுந்தரலிங்கம் குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்ற கம்பீரத் தோற்றத்துடன் கூடிய புதிய சிலை ஆகியவற்றை எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி அவர்களின் திருவுருவச் சிலை சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம், விசுவநாதப்பேரியில் வெண்ணி காலாடி அவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையையும்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி அவர்களின் திருவுருவச் சிலை. சிவகங்கை வட்டம், இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய்க்கு 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையையும்

சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம்.

சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்கள் நாயக்கர் அவர்கள் வீரத்தைப் போற்றி 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலையையும், தளி பேரூராட்சி, திருமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் நினைவு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 9.10.2024 அன்று திறந்து வைத்தார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள்வரை, நாட்டிற்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களைப் போற்றி அவர்களுடைய சிலைகளையும் மணிமண்டபங்களையும், அரங்கங்களையும் அமைத்து வருங்கால இளைஞர்கள் அறிந்து பின்பற்றும் வண்ணம் இதுவரை 10 நினைவரங்கங்கள் 36 சிலைகள் அமைத்துள்ளார்கள். மேலும் பல தியாகிகளுக்குரிய நினைவுச் சின்னங்களையும் அமைத்து வருகிறார்கள். இவை இந்தியாவிற்கே வழிகாட்டத் தக்கவையாகும்.

Also Read: ”தமிழ்நாட்டின் வலி நிவாரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் சேகர்பாபு புகழாரம்!