Tamilnadu
”பா.ஜ.கவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது” : அமைச்சர் சக்கரபாணி பதில் அறிக்கை!
தரமான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் செய்யப்படுகிறது என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ஆதாரமற்றக் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவரது அறிக்கை வருமாறு:-
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் மற்றும் விநியோகம் பற்றி விரிவாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு பின் கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளித்து மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். வானதி சீனிவாசன் தன் அறிக்கையில் துவரம் பருப்பின் வெளிச்சந்தை விலை ரூ.200/- என்று குறிப்பிட்டிருந்தார். அதே கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் அவர் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததைக் கூட அறியாமல் எவ்வித ஆதாரமுமின்றி ஒரு குற்றச்சாட்டைத் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வெளிச்சந்தையில் பருப்பு விலை என்ன என்பதைக் கூட அறியாமல் அல்லது அறிந்தும் உள்நோக்கத்துடன் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் தெரிவித்திருக்கிறார். ஒரு கடையில் (92CB847NC - அன்பழகன் நகர் - 2) பருப்பு இல்லை என்று இன்னொரு குற்றச்சாட்டையும் ஆதாரமில்லாமல் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட கடையில் 1319 குடும்ப அட்டைகள் உள்ளன. அந்தக் கடைக்கு அக்டோபர் 24 மாதத்திற்கு ஏற்கனவே இருப்பில் இருந்த 53 கிலோவுடன் 1119 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு 800 கிலோ துவரம் பருப்பு நகர்வு செய்யப்பட்டு இதுவரை 605 கிலோ துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அது போக 248 கிலோ துவரம் பருப்பு இந்தக் கடையில் இன்று இருப்புள்ளது. இன்று (17.19.2024) கூட 39 குடும்ப அட்டைதாரர்கள் துவரம் பருப்பைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது என்பதை அறியாதவர்களுக்கும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளருக்கும் அதன் விவரத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் ஒளிவு மறைவற்ற திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2008-இன் படி ஒரு ஆங்கில நாளிதழிலும், தமிழ் நாளிதழிலும் பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலுக்கு விலைப்புள்ளிகள் கோரி விளம்பரம் செய்யப்படும். அதோடு இணைய வழியிலும் (e-tender) விளம்பரம் செய்யப்படுகிறது. இந்தியா முழுதும் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்துச் சமர்பிக்கப்படும் விலைப்புள்ளிகள் மற்றும் மாதி- ரிப் பொருள்களை (Sample) ஒப்பந்தக் கூராய்வுக் குழு (Tender Scrutiny Committee) ஆய்வு செய்யப்பட்டு, தரம் மற்றும் தகுதிகள் உள்ள நிறுவனங்களின் விலைப்புள்ளிகளைக் குழுமத் துணைக் குழு (Board Sub Committee) ஆய்வு செய்து குறைந்த விலைப்புள்ளிகள் அளித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப் பட்டியலை முடிவு செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
துணைக் குழுவில் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் துணைச் செயலாளர் (பட்ஜெட்) ஆகிய மூன்று இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
துணைக்குழு ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலைக்குறைப்பு செய்து முடிவு எடுத்ததைப் பதினொன்று இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகக் குழு பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுத்துக் குறைந்த விலைப்புள்ளிகள் அளித்த நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆணைகள் வழங்கப்படுகின்றன.
மெஸர்ஸ் சி.ப்பி ஃபுட்ஸ், விருதுநகர் என்ற நிறுவனம் கனடா மஞ்சள் பருப்பினைக் கொள்முதல் செய்யக் கோரி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எண். டபிள்யு.ப்பி.2377/2023 யின் தீர்ப்புரையில் பருப்பு கொள்முதல் செய்யும்போது எந்த பருப்பு விலை குறைவாக உள்ளதோ அந்த பருப்பினைக் கொள்முதல் செய்வதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த மாதத்தில் (செப்டம்பர் - 2024), அனைத்துப் பருப்புகளிலும் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த ஐந்து நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்ட அக்ரிகோ என்ற நிறுவனம் பேச்சு வார்த்தையிலேயே கலந்து கொள்ளவில்லை.
ஆதலால், முறைப்படி வெளிப்படைத் தன்மையுடன் முடிவெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் துறை அமைச்சரைப் பற்றியோ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனரைப் பற்றியோ குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஒப்பந்தப்படி உரிய காலத்தில் விநியோகம் செய்யாத நிறுவனங்கள் மீது ஒப்பந்தப்புள்ளிகள் விதிகளின்படி தாக்கீது அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்க ஒரு பொறுப்புள்ள கட்சியின் செய்தித் தொடர்பாளர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் 180 கோடி ரூபாய் இழப்பு மற்றும் ஊழல் என்று கூறுவது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானது. அதே போல் குறிப்பிட்ட ஒரு கடையில் பருப்பு இல்லை என்று கூறியிருப்பதும் அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஆதலால் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஏ.என். எஸ். பிரசாத் தன்னுடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!