Tamilnadu

“காலநிலை மாற்ற வீராங்கனைகள்” திட்டத்திற்கு ரூ. 3.87 கோடி ஒதுக்கீடு! : தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் காலநிலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த "காலநிலை மாற்ற வீராங்கனைகள்" என்ற திட்டத்தை செயல்படுத்த ரூ. 3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மகளிரின் முக்கியப் பங்கை உணர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் "காலநிலை மாற்ற வீராங்கனைகள்" என்ற விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார்.

கூடுதலாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக முதற்கட்டமாக 500 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த சுற்றுச்சூழல் பற்றிய பரப்புரையை முன்னெடுப்பார்கள் எனவும் இதற்காக அவர்களுக்கு மின் ஆட்டோ வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

அதனை செயல்படுத்தும் வகையில் "காலநிலை மாற்ற வீராங்கனைகள்" திட்டத்தை செயல்படுத்த ரூ. 3.87 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், நூறு மின்சார ஆட்டோ வாங்க 3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக 10.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கண்ணை மூடிக் கொண்டு, ‘ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கிறதா?’ என்கிறார் எடப்பாடி! : முரசொலி கண்டனம்!