Tamilnadu

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்... CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கபட்டதை தொடர்ந்து நீட் தேர்வு தேர்ச்சி பெறுவதற்காக 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களை நோக்கி படையெடுக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் பிரபல பயிற்சி மையத்தின் நீட் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக நெல்லையை தலைமை இடமாகக் கொண்டு ஜல்(JAL NEET ACADEMY) என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி உள்ளார்.

இந்த பயிற்சி மையத்தில் சராசரியாக 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வரும் நிலையில், தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் கடும் மன அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஒரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தில் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் மாணவர்களை பிறம்பால்(கம்பால்) சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் மாணவர்களுக்கு உடலில் கை கால் முதுகு பின்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது,

அதோடு காலனியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவி மீது தூக்கி வீசி ஜலாலுதீன் அஹமத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனிடையே ஜல் நீட் அகாடமியில் வார்டனாக வேலை பார்த்த தாழையூத்து பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் இந்த கொடுமைகளை கண்டு அதிர்ந்து, சிசிடிவி பதிவுகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஜல் அகாடமியில் இது போன்று மாணவர்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறை சி.எஸ்.ஆர் பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பயிற்சி மைய உரிமையாளர் பயிற்சியாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்கள், மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் 'இந்தி' மாத விழா - கண்டனம் தெரிவித்து மோடிக்கு முதலமைச்சர் கடிதம் !