Tamilnadu

கன மழை : ”துரித நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

தமிழ்நாட்டில் இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாகவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகரில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவில் இருந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று நள்ளிரவே பள்ளிக்கரணை ஏரிக்கரைப்பகுதி மற்றும் அம்பேத்கர் சாலை கால்வாய்பாலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று, சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் முகத்துவார பகுதியை ஆய்வு செய்தார்.பிறகு, சென்னை எழிலகத்தில், மழை வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் 65 ஆயிரம் தன்னார்வலர்கள், தமிழ்நாடு முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் அமைப்புப்பட்டுள்ளது.

சென்னையில் 300 என மொத்தம் 930 நிவராண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 89 என மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 2 மட்டுமே மூடப்பட்டுள்ளன. கனமழையால் முறிந்து விழுந்த 8 மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: அதிக மழை வந்தாலும், மழை நீரை அகற்றுவதற்காக நடவடிக்கை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!