Tamilnadu

Red Alert... அடுத்தடுத்த நாட்களில் தொடர் கனமழை... வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுவது என்ன?

தமிழ்நாட்டில் இந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாளை (அக்.15), அக். 16 ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது. இந்த சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாலச்சந்திரன் பேசியதாவது, “கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பகுதிகளில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர், பூதலூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நிலைகொண்டுள்ளது. வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு, வட மேற்கு திசை நகர்ந்து வட தமிழ்நாடு, புதுவை, தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலைகொள்ளும்.

அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓமன் கரைப்பகுதியில் நகர்ந்து செல்கிறது. எனவே அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரியிலும் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் தீவிர கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

வரும் 16-ம் தேதி வடகடலோர மாவட்டங்களான டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

வரும் 17-ம் தேதி வடமேற்கு மாவட்டங்கள் உள்ளடக்கிய இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தமிழ்நாடு, கடற்கரைப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடல், தெற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதி அரபிக்கடல் பகுதிக்கு 14 முதல் 16 ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்.

வரும் 16 ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் ஒரு சில இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும். அரபிக்கடல், வங்கக்கடல் இரண்டிற்கும் இடையில் வெவ்வேறு காலநிலை மாற்றங்கள் நிகழும் போது பல்வேறு வளிமண்டல சுழற்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இடத்திற்கேற்ப மழை அளவு மாறுபடும்” என்றார்.

Also Read: முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு : பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்... விவரம் என்ன ?