Tamilnadu

"தண்ணீர் தேங்காமல் தடுக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KN நேரு பேட்டி !

சென்னைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பழைய வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் சுரங்கப்பாதை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்..

தொடர்ந்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னை உள்பட பல மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 40 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த கால அனுபவத்தை வைத்து இந்த முறை பணி செய்து வருகிறோம். நிவாரண முகாம்களில் பால், பிஸ்கெட், உள்ளிட்டவைகள் தயாராக வைத்து உள்ளோம், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்து உள்ளோம். மக்களுக்கு எந்த சிரமம் இல்லாமால் அரசு அனைத்து நடவடிக்கை எடுத்து உள்ளது...

990 இடங்களில் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சுரங்கப்பாதைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ பணிகள் மற்றும் இரயில்வே மேம்பாலப் பணிகளால் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முதலில் தொடங்கப்பட்ட அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்று விட்டது. சராசரி மழை பெய்யும்போது எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் சராசரியை விட அதிகமாக மழை பெய்யும் என்று சொல்லியிருப்பதால் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு மூன்று மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"என்று கூறியுள்ளார்.

Also Read: அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் உள்ளன! : முன்னெச்சரிக்கை குறித்து தலைமைச்செயலாளர் சொல்வது என்ன?