Tamilnadu
ரூ.5.81 கோடி செலவில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயிலான கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புனரமைக்கும் பணி ஆகிய 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 68.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகங்கள், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் ஆகிய 4 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், ஒருகால பூசைத் திட்டம் விரிவாக்கம், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்கு மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,226 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,755 கோடி மதிப்பிலான 7,005.70 ஏக்கர் சொத்துகளும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், 5,433.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 20,607 திருப்பணிகளில் 9,083 திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயிலில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபக்கோயிலான கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி மற்றும் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்காவாக புதுப்பொலிவுடன் புனரமைக்கும் பணி, என மொத்தம் 5.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
நான்கு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 29.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமை பெறாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின்பு, பக்தர்களின் நலன் கருதி கூடுதல் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 19.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 48.36 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பக்தர்கள் தங்கும் விடுதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த புதிய பக்தர்கள் தங்கும் விடுதியானது, இரண்டு தளங்களுடன் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள் (Double Bed Rooms), 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள் மற்றும் 7 கட்டில்கள் கொண்ட12 அறைகள் என 28 கூடுதல் படுக்கை அறைகள் (Dormitory Blocks), ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 பக்தர்கள் தங்கும் குடில்கள் (Family Cottages), சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்திட்ட வரைவின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை மண்டபம், 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள், 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம்; என மொத்தம் 68.36 கோடி ரூபாய் செலவில் 4 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !