Tamilnadu

சென்னைக்கு ரெட் அலர்ட் : தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு அக். 16 ஆம் தேதி ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தெடர்ந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. நேற்று நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு, அடையாறு போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேலும் இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

குறிப்பாக சென்னையில், தாழ்வான பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற தயார் நிலையில் 990 மின் மோட்டார் பம்புகள், 162 நிவாரண மையங்கள். 32 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சாலையில் விழும் மரங்களை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரங்கள்,ஒவ்வொரு வார்டிலும் அவசர உதவிகளுக்கு 5 நபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 15 மண்டலங்களுக்கும் 15 IAS அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.

மேலும் அவசர பணிகளை தவிர்த்து சாலைகளில் குழி வெட்டும் பணிகளை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையின் 6 சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கனரக மோட்டர்கள் பொருத்தப்பட்ட 57 டிராக்டர்கள் சென்னை மாநகராட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தேவைக்கேற்ப எண்ணிக்கையிலான மோட்டார் பம்ப் டிராக்டர்கள் அனுப்பப்படவுள்ளது.

Also Read: மாணவர்கள் கவனத்திற்கு: பொதுத்தேர்வு நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்