Tamilnadu

சத்தமில்லாமல் உதவி - ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.5.20 லட்சத்திற்கு புத்தாடை வாங்கி கொடுத்த திமுக MLA!

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிக்கைக்கான கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பலரும் தங்களின் தீபாவளி பண்டிகையை தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரம் என தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆதரவற்ற குழந்தைகளும் தீபாவளியை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்து மகிழ்வித்துள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் கடந்த 8 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை காலத்தில், ஆதரவற்ற குழந்தைகளை ஜவுளி கடைக்கே அழைத்து சென்று, அவர்கள் விரும்பிய புத்தாடைகளை தீபாவளி பரிசாக வாங்கி கொடுத்து மகிழ்வித்தார்.

அதேபோல இந்த வருடமும், ராஜபாளையம் தென்றல் நகர், சேத்தூர் மற்றும் பொன்னகரம் ஆகிய மூன்று இடங்களில் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில் வசிக்கும் 235 சிறுவர், சிறுமியர்களை காந்தி சிலை அருகே உள்ள பிரபர ஜவுளிக் கடைக்கு நேரடியாக அழைத்து சென்றார்.

சிறுவர் சிறுமியர் சிலருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்த எம்.எல்.ஏ, ஒரு சிறுவனுக்கு புதிய ஆடையை அணிவித்து அழகு பார்த்தார். அப்போது சுற்றி இருந்த மற்ற சிறுவர், சிறுமியர் கை தட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் மற்ற சிறுவர், சிறுமியர்கள் தங்களுக்கு தேவையான ஆடைகளை அவர்களாகவே தேர்வு செய்தனர். சிறுவர்கள் தேர்வு செய்த புத்தாடைகளுக்கான தொகை சுமார் ரூ. 5.20 லட்சத்தை தனது 4 மாத ஊதிய பணத்தில் இருந்து வாங்கி, ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு தீபாவளி பரிசாக எம்.எல்.ஏ வழங்கினார்.

பரிசை பெற்றுக் கொண்ட சிறுவர்கள் எம்.எல்.ஏ-விடம் கை குலுக்கி நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்தனர். சத்தமில்லாமல் எம்.எல்.ஏ செய்த உதவிக்கு பலரும் தங்களின் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 6-வது முறையாக சிகரத்தில் ஏறும் முத்தமிழ்ச்செல்வி... ஊக்கத்தொகையாக திமுக MLA ரூ.1 லட்சம் நிதியுதவி !