Tamilnadu

கனமழையால் எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது... முன்னேற்பாடுகளை செய்ய ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு !

தமிழ்நாட்டில் வரும் 15 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதோடு மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்” : வயநாடுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்!