Tamilnadu

முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரைத்துறையினர்!

எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று (அக்.10) பெங்களூருவில் காலமானார். தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராகவும், பத்திரிகை துறையிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்த முரசொலி செல்வம், முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற பெயரில் தொடர்ந்து கட்டுரைகளும் எழுதி வந்தார். முரசொலி நாளிதழுக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு தி.மு.க நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முரசொலி செல்வம் உடலுக்கு திரைத்துறை பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பி.வாசு, பார்த்திபன், நடிகர்கள் ராஜேஷ், விஜயகுமார், தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

”தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுடைந்து கலங்கியது, முரசொலி செல்வம் அவர்களுடைய மதிப்பையும் தி.மு.கவிற்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், அவரது இறப்பு மிகப் பெரிய இழப்பு என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது" என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Also Read: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலி செல்வம்...” - திருமாவளவன் புகழஞ்சலி !