Tamilnadu

பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார் குழு! : சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு!

பெண்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. அதற்கு, விடியல் பயணம், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் சான்றுகளாகவும் அமைந்துள்ளன.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.

அவ்வறிக்கையில் தெரிவித்ததாவது, “சென்னை மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள். மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 ன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ( Internal Complaints Committee) ஏற்படுத்தப்பட்ட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும்.

அவற்றில் அதிகபட்சமாக (3) பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார்பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளக புகார்குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.

10 க்கும் குறைவாக பணியாளர்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தனது முதலாளிக்கு எதிராக நேரடியாக மாவட்டங்களில் செயல்படும் உள்ளூர்புகார்குழு (Local Complaint Committee) ல் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் புகார்குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட சமூகநல அலுவலத்தில் அறிக்கையாக ஒவ்வொரு நிறுவனமூம் ஆண்டு அறிக்கையாக வழங்கப்பட வேண்டும்.

தண்டனை

உள்ளக புகார்குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு இரத்து செய்யப்படும். இப்புகார்குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ. 50,000/- வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்யலாம்.

எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”

Also Read: “ஒன்றிய அரசின் போக்கு, பாசிசத்தின் உச்சம் - நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்”: துணை முதலமைச்சர்!