Tamilnadu
வடசென்னை வளர்ச்சித் திட்டம் : அரசு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட துணை முதலமைச்சர்... விவரம் என்ன ?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலின் பேரில், வட சென்னை வளர்ச்சித் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
மேலும், வட சென்னை வளர்ச்சித் திட்டம் மூலம் நடைபெறும் பணிகளைக் கண்காணிக்கின்ற வகையில், பிரத்யேக செயலி மற்றும் இணையதளத்தின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கழக அரசையும் சென்னையின் வளர்ச்சியையும் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. எப்போதெல்லாம் நம் கழக அரசு அமைகிறதோ, அப்போதெல்லாம் சென்னை மாநகரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
1970-களில் சென்னையின் அப்போதைய போக்குவரத்து நெரிசலை மனதில் வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசால் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம், 1973-இல் திறந்து வைக்கப்பட்டது. அன்று கலைஞர் அரசு கட்டிய அண்ணா மேம்பாலம், 50 ஆண்டுகளைக் கடந்து, இன்றும் மக்களுக்கு மிகுந்த பயன் தந்து வருகிறது. அந்த வரிசையில் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், மேம்பாலங்கள், நூலகங்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு சென்னைக்குத் தந்தள்ளது, இன்றும் தந்துகொண்டு வருகிறது.
தென்சென்னையுடன் ஒப்பிடும்போது, வட சென்னையின் வளர்ச்சி சற்றே குறைவு என்ற எண்ணம் மக்களுக்கு உண்டு. நம் முதலமைச்சர் அவர்கள், “தி.மு.க. உருவானதும் வடசென்னையில்தான். முதல்வரான என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்ததும் இந்த வடசென்னையில் அமைந்துள்ள கொளத்தூர் தொகுதி மக்கள்தான்” என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் மனதில் வைத்துத்தான் நம் முதலமைச்சர் அவர்களால் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 5 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 225 திட்டங்களைக் கொண்ட தொகுப்புதான் இந்த வடசென்னை வளர்ச்சித் திட்டம். மருத்துவமனைகள், பேருந்து முனையங்கள், பள்ளிக் கட்டடங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்தரக்கூடிய பல திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தத் திட்டங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவேண்டும் என்பதுதான் நம் திராவிட மாடல் அரசின், நம் முதலமைச்சரின் நோக்கம்.
அந்த வகையில், சில திட்டங்கள் பணிகள் முடிந்து நிறைவுபெற்றுள்ளன. சில திட்டப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. ஆனால், சில திட்டங்கள் மட்டும் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றன. சில திட்டப் பணிகள் அரசாணை வெளியிடப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் இருக்கிறது. இந்தத் தாமதம் எதனால் என்பதை கண்டறிந்து, தொடங்கப்படாமல் இருக்கும் பணிகள், உடனடியாக அதாவது டிசம்பர் முதல் வாரத்திற்குள் கண்டிப்பாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம்.
இந்தக் கூட்டத்தில், பணியின் தொடக்கம், முன்னேற்றம், அவை எப்போது முடியும் என்பதற்கான டைம் லைன்-ஐ நீங்கள் எனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசின் எண்ணற்றச் சாதனைகள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்படும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தையும் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதுணையாக இருந்து முடித்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
Also Read
-
“ரொம்ப Touching-ஆ இருக்கு.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு..” - ‘அமரன்’ படக்குழுவினருக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு தீக்காய பிரிவு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
-
"நான் எப்போதும் குடும்பம் பிரியக்கூடாது என்றுதான் நினைப்பேன்" - சரத் பவார் நெகிழ்ச்சி !
-
சென்னை சென்ட்ரல் TO தேனி... பயணிகளுடன் சென்ற இரயிலில் இருந்து கழன்ற சக்கரம்.. மதுரையில் நடந்தது என்ன ?
-
தீபாவளி... 108 அவசார கால மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு !