Tamilnadu
தனியார் கல்லூரிகள் கெடுபிடி வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீக்காய பிரிவில் ரூபாய் 8.80 கோடி மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனை இந்தியாவில் உள்ள 2வது பெரிய தீக்காய மருத்துவ சிகிச்சை மருத்துவமனை ஆகும்.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல், மற்ற மாநிலங்களில் இருந்து வருகை தந்து தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.தீக்காய பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட தோலை மாற்றும் வகையில் உடல் உறுப்பு தானத்தின் ஒரு பகுதியாக தோல் பெறப்பட்டு இங்கு Skin bank ம் செயல்பட்டு வருகிறது.
அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, இன்று ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாடு கூட்டுறவு முகமை ஆதாரத்துடன் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது....
அதி அழுத்த பிராணவாயு சிகிச்சை கருவிகள், சீர் ஒளி சிகிச்சை கருவி, அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கி கருவி, தோல் எடுக்கும் கருவி, வலை இடைவெளி கருவி உள்ளிட்ட 7 வகையான கருவிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படுள்ளது.
ஓய்வுப்பெற்ற நீதியரசர் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு தான் தனியார் மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூட்டமைப்பு இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்த குழுவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் குழு அதனை நிராகரித்துவிட்டது...
சில கல்லூரிகளில் மாணவர்களிடம் 3.5 லட்சம் வரை கூடுதல் கட்டணம் கறாராக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பாக வந்த இரண்டு புகார்கள் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வேறு யாராக இருந்தாலும் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கல்லூரிகள் கெடுபிடி வசூல் செய்திருப்பார்கள் என்று புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்...
அக்டோபர் 14 ஆம் தேதி மருத்துவ இளங்கலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி பாரா மெடிக்கல் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
Also Read
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !